சத்தியமங்கலம் மார்க்கெட்டில், மல்லிகைப்பூ கிலோ ரூ.4,742-க்கு ஏலம்; ஒரு முழம் ரூ.100-க்கு விற்பனை; பெண்கள் அதிர்ச்சி
சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ஒன்று ரூ.4 ஆயிரத்து 742-க்கு ஏலம் போனது. ஒரு முழம் மல்லிகைப்பூ ரூ.100-க்கு விற்பனை ஆனதால் பெண்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஏலம்
சத்தியமங்கலம் கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் இயங்கி வருகிறது. இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் தங்களுடைய பூக்களை விற்பனைக்காக கொண்டு வருவார்கள்.
இதேபோல் இந்த மார்க்கெட்டுக்கு ஈரோடு, கோவை, நீலகிரி, சேலம், நாமக்கல் மாவட்டங்கள் மட்டுமின்றி கேரளா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களிலும் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் இங்கு வந்து பூக்களை ஏலம் எடுத்து செல்வர். மேலும் இ்ங்கிருந்து பூக்கள் மும்பை, பெங்களூரு வழியாக துபாய் மற்றும் சார்ஜா போன்ற வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் பூக்களை ஏலம் எடுப்பதில் வியாபாரிகளிடையே கடும் போட்டி நிலவும்.
மல்லிகைப்பூ கிலோ ரூ.4,742
வழக்கம்போல் நேற்று காலை 7 மணிக்கு பூக்கள் ஏலம் தொடங்கியது. ஏலத்துக்கு சத்தியமங்கலம், கொத்தமங்கலம், பவானிசாகர், ராஜன் நகர், புதுப்பீர்கடவு உள்பட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் 2 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். நேற்று நடந்த ஏலத்தில் மல்லிகைப்பூ கிலோ ஒன்று ரூ.4 ஆயிரத்து 742-க்கும், முல்லை ரூ.880-க்கும், காக்கடா ரூ.400-க்கும், செண்டுமல்லி ரூ.70-க்கும், பட்டுப்பூ ரூ.66-க்கும், ஜாதிமல்லி ரூ.750-க்கும், கனகாம்பரம் ரூ.350-க்கும், சம்பங்கி ரூ.70-க்கும், அரளி ரூ.140-க்கும், துளசி ரூ.50-க்கும், செவ்வந்தி ரூ.160-க்கும் ஏலம் போனது. நேற்று முன்தினம் நடந்த ஏலத்தில் மல்லிகைப்பூ கிலோ ஒன்று ரூ.2 ஆயிரத்து 800-க்கும், முல்லை ரூ.880-க்கும், காக்கடா ரூ.500-க்கும், செண்டுமல்லி ரூ.31-க்கும், பட்டுப்பூ ரூ.50-க்கும், ஜாதிமல்லி ரூ.700-க்கும், கனகாம்பரம் ரூ.500-க்கும், சம்பங்கி ரூ.100-க்கும், அரளி ரூ.150-க்கும், துளசி ரூ.60-க்கும், செவ்வந்தி ரூ.160-க்கும் விற்பனை ஆனது.
நேற்று முன்தினத்தை விட நேற்று மல்லிகைப்பூ கிலோவுக்கு ரூ.1,942-ம், செண்டுமல்லி ரூ.39-ம், பட்டுப்பூ ரூ.16-ம், ஜாதிமல்லி ரூ.50-ம் விலை உயர்ந்து விற்பனை ஆனது. ஒரே நாளில் மல்லிகைப்பூ மட்டும் கிலோ ஒன்று ரூ.1,942 உயர்ந்து ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கடும் கிராக்கி
இதுகுறித்து பூ மார்க்கெட் தலைவர் முத்துசாமி, செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கூறுகையில், ‘சத்தியமங்கலம் பகுதியில் கடந்த 2 நாட்களாக பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. இதன்காரணமாக அனைத்து பூக்களின் வரவும் குறைந்துவிட்டது. அதே நேரத்தில் வியாபாரிகளுக்கு பூக்கள் தேவை அதிகமாக இருந்தது.
குறிப்பாக சார்ஜாவுக்கு ஏற்றுமதி செய்வதற்காக பூக்களை ஏலம் எடுக்க கோவை, கேரளாவை சேர்ந்த வியாபாரிகள் அதிக அளவில் வந்திருந்தனர். இதன்காரணமாக மல்லிகைப்பூவுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டு வியாபாரிகளிடையே போட்டி நிலவியது. கடும் போட்டி காரணமாக மல்லிகைப்பூ விலையில் ஏற்றம் காணப்பட்டது.
பெண்கள் அதிர்ச்சி
வெயில் காலத்தில் இந்த மார்க்கெட்டுக்கு 10 டன் வரை மல்லிகைப்பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படும். ஆனால் பனிப்பொழிவு காரணமாக 500 கிலோ மல்லிகைப்பூக்கள் மட்டுமே விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. வரத்து மேலும் குறைந்தால் மல்லிகைப்பூ விலை இன்னும் உயர வாய்ப்பு உள்ளது,’ என்றனர்.
சத்தியமங்கலம் பகுதியில் மல்லிகைப்பூ சரம் ஒரு முழம் ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டதால் பெண்கள் அதிர்ச்சி அடைந்தனர்.