நெல்லையில் பொங்கல் சீர்வரிசைக்காக தயாராகும் பித்தளை பாத்திரங்கள்

நெல்லையில் பொங்கல் சீர்வரிசைக்காக பித்தளை பாத்திரங்கள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2021-01-03 01:47 GMT
நெல்லை டவுனில் தயார் செய்யப்பட்டுள்ள பித்தளை பாத்திரங்களை படத்தில் காணலாம்
பித்தளை பாத்திரங்கள்
நாகரிக மாற்றத்தில் மண்பாண்டங்களுக்கு பதிலாக உலோகத்தாலான பொருட்களை மக்கள் பெரிதும் பயன்படுத்துகின்றனர். பொங்கல் பண்டிகைக்கு பெரும்பாலும் மண்பானையில் பொங்கலிட்டு இறைவனை வழிபட்டாலும், புதுமண தம்பதியருக்கு சீர்வரிசையாக பித்தளை பாத்திரங்களையே அனைவரும் வாங்கி கொடுப்பார்கள். பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால், புதுமண தம்பதிகளுக்கு சீர்வரிசை கொடுப்பதற்காக பலரும் தயாராகி வருகின்றனர். சீர்வரிசையில் பித்தளை பாத்திரங்களை வாங்கி கொடுப்பதையே அனைவரும் விரும்புகின்றனர். மருத்துவ குணம் வாய்ந்த பித்தளை பாத்திரங்களை பயன்படுத்துவதால் எண்ணற்ற நன்மைகள் ஏற்படுகிறது.

தயாரிப்பு பணி மும்முரம்
நெல்லை தச்சநல்லூர், டவுன், பழைய பேட்டை உள்ளிட்ட இடங்களில் ஏராளமான பித்தளை பாத்திரங்கள் தயாரிப்பு பட்டறைகள் உள்ளன. அங்கு பித்தளை பாத்திரங்கள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து பழைய பேட்டையைச் சேர்ந்த பித்தளை பாத்திரங்கள் தயாரிப்பு பட்டறை உரிமையாளர் முருகன் கூறியதாவது:-

வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி
இங்குள்ள பட்டறைகளில் பித்தளை பானை, குடம், நாழி- உழக்கு செட், சரவசட்டி, தவலைப்பானை போன்றவற்றை தயாரித்து வருகிறோம். பொங்கல் சீர்வரிசையாக பெண் வீட்டார் அனைவரும் பித்தளை பாத்திரங்களையே புதுமண தம்பதியருக்கு வாங்கி கொடுப்பர். இதனால் கடைகளில் பித்தளை பாத்திரங்கள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

முன்பு ஏராளமானவர்கள் பித்தளை பாத்திரம் தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது பழைய பேட்டை பகுதியில் 24 பட்டறைகளே இயங்கி வருகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் பித்தளை பாத்திரங்களை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரளா, கர்நாடகா, புதுச்சேரி, மராட்டியம் உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்