“யார் வந்தாலும் வரவில்லை என்றாலும் நீங்கள் வர வேண்டும்” நடிகர் விஜய்யை அரசியலுக்கு அழைத்து ரசிகர்கள் ஒட்டிய சுவரொட்டி - தேனியில் பரபரப்பு

தேனியில் நடிகர் விஜய்யை அரசியலுக்கு அழைத்து அவரது ரசிகர்கள் ஒட்டிய சுவரொட்டி பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2021-01-02 16:32 GMT
தேனி,

நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தொடங்கிய அகில இந்திய தளபதி மக்கள் இயக்கம் என்ற அரசியல் கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருந்தார். அதனைத்தொடர்ந்து விஜய் தரப்பில் இருந்து ஒரு அறிக்கை வெளியானது. அதில், தன்னுடைய ரசிகர்கள் யாரும் அந்த அரசியல் கட்சியில் சேர வேண்டாம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இது பரபரப்பை ஏற்படுத்தியது. அதே நேரத்தில், நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா? என்ற எதிர்பார்ப்பு கடந்த சில ஆண்டுகளாகவே ரசிகர்களிடம் அதிகரித்து காணப்படுகிறது.

இதற்காக அவருடைய பிறந்தநாள், புதிய படங்கள் வெளியாகும் நாட்களில் விஜய்யை அரசியலுக்கு அழைக்கும் வகையில் ரசிகர்கள் சுவரொட்டி ஒட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில், தேனியில் ஆங்கில புத்தாண்டையொட்டி நேற்று நடிகர் விஜய் ரசிகர்கள் ஒட்டிய சுவரொட்டிகள் பரபரப்பை ஏற்படுத்தின.

விஜய் மக்கள் இயக்கத்தின் தேனி மாவட்ட தலைமை சார்பில் ஒட்டப்பட்டு இருந்த அந்த சுவரொட்டிகளில் விஜய்யை அரசியலுக்கு அழைக்கும் வகையில் வாசகங்கள் இடம் பெற்று இருந்தன. ஒரு சுவரொட்டியில், "யார் வந்தாலும் வரவில்லை என்றாலும் நீங்கள் வரவேண்டும் தலைவா. யாரை நம்பியும் நாம் இல்லை, மக்களைத்தவிர" என்ற வாசகம் இடம் பெற்று இருந்தது.

மற்றொரு சுவரொட்டியில், "2021 புதிய வருடம், புதிய கட்சி மக்கள் இயக்கம், புதிய அரசியல், புதிய தலைவர், புதிய ஒருவனாக தளபதி, புதிய நம்பிக்கை. தமிழகத்திற்கு நீங்கள் எடுக்கும் முடிவே எங்களின் இறுதி முடிவு தலைவா" என்ற வாசகங்கள் இடம் பெற்றிருந்தன. இதுபோன்ற பரபரப்பான வாசகங்களுடன் கூடிய சுவரொட்டிகள் தேனியில் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டு இருந்தன.

மேலும் செய்திகள்