வெவ்வேறு விபத்துகளில் வக்கீல் உள்பட 3 பேர் பலி
தேனி, ஆண்டிப்பட்டி பகுதிகளில் நிகழ்ந்த வெவ்வேறு விபத்துகளில் வக்கீல் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.
ஆண்டிப்பட்டி,
தேனி அல்லிநகரம், கக்கன்ஜி காலனியை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மனைவி முருகேஸ்வரி (வயது 67). இவர் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் முருகேஸ்வரி நேற்று முன்தினம் இரவு சிகிச்சை முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். பெருமாள்கோவில்பட்டி அருகே நடந்து சென்ற அவர், அங்குள்ள சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த கன்டெய்னர் லாரி ஒன்று முருகேஸ்வரி மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து க.விலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் ஆண்டிப்பட்டி அருகே உள்ள டி.பொம்மிநாயக்கன்பட்டியை சேர்ந்த பாண்டியன் மனைவி பழனியம்மாள் (65). இவர் நேற்று முன்தினம் மாலை டி.பொம்மிநாயக்கன்பட்டி அருகே தேனி-மதுரை சாலையை கடக்க முயன்றார். அப்போது தேனியில் இருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்று பழனியம்மாள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பழனியம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி அருகே உள்ள அய்யனார்புரத்தை சேர்ந்தவர் அய்யர் (35). வக்கீல். இவர் கடந்த 25-ந்தேதி அம்மச்சியாபுரத்தை சேர்ந்த ஜெயபிரகாஷ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் தேனியில் இருந்து அய்யனார்புரத்துக்கு சென்று கொண்டிருந்தார். அரண்மனைப்புதூர் ஆற்றுப் பாலத்தையொட்டி உள்ள ஆட்டோ நிறுத்தம் அருகில் வந்தபோது மோட்டார் சைக்கிளை ஜெயபிரகாஷ் கவனக்குறைவாக ஓட்டியுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் இருந்து அய்யர் கீழே விழுந்தார். இதில் அவருடைய தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து அவருடைய அண்ணன் அய்யனார் கொடுத்த புகாரின் பேரில் ஜெயபிரகாஷ் மீது பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.