திருவலத்தில் மாயமான தொழிலாளி கால்வாயில் பிணமாக மீட்பு
திருவலத்தில் மாயமான தொழிலாளி கால்வாயில் பிணமாக மீட்கப்பட்டார்.
திருவலம்,
திருவலம் மேட்டுப்பாளையம், பழைய காலனி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 60). கூலித் தொழிலாளி. கம்பராஜபுரம் பெரிய ஏரி கால்வாய் பாலத்தின் மீது கடந்த 29-ந் தேதி அமர்ந்திருந்த ரமேஷ், திடீரென்று காணாமல் போய்விட்டார். இதுகுறித்து திருவலம் போலீசில் நேற்று முன்தினம் உறவினர்கள் புகார் அளித்தனர். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பிச்சாண்டி மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து ரமேசை தேடி வந்தனர்.
பாலத்தில் அமர்ந்திருந்ததால் அவர் கால்வாய் தண்ணீரில் விழுந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் சிப்காட் தீயணைப்புத் துறையினர் வரவைக்கப்பட்டனர். நிலைய அலுவலர் சுப்பிரமணி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் கால்வாயில் நேற்று முன்தினம் மாலை முதல் ரமேசை தேடினர். ஆனால் ரமேசை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் நேற்று காலை முதல் மீண்டும் ரமேசை தேடும் பணி தொடங்கியது. மாலையில் பாலத்துக்கு அடியில் ரமேஷ் பிணமாக இருந்தது கண்டிபிடிக்கப்பட்டு உடலை மீட்டனர். இது குறித்து திருவலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.