கோவை, நீலகிரியில் 8 இடங்களில் இன்று நடைபெறுகிறது - கொரோனா தடுப்பூசி ஒத்திகை ஏற்பாடுகள் தீவிரம்
கோவை, நீலகிரி மாவட்டங்களில் 8 இடங்களில் இன்று (சனிக்கிழமை) கொரோனா தடுப்பூசி ஒத்திகை ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றது வருகிறது.
கோவை,
கொரோனா பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்றும் வகையில் தடுப்பூசி வழங்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் முன்னோட்டமாக இன்று (சனிக்கிழமை) கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி, புரூக்பாண்ட் ரோடு சீதாலட்சுமி மகப்பேறு ஆஸ்பத்திரி, பி.எஸ்.ஜி. மருத்துவமனை, சூலூர் அரசு ஆஸ்பத்திரி, போளுவாம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய 5 இடங்களிலும், நீலகிரி மாவட்டம் ஊட்டியில் சேட் நினைவு அரசு மகப்பேறு மருத்துவமனை, குன்னூர் அரசு லாலி மருத்துவமனை, நெலாக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய 3 இடங்கள் என மொத்தம் 8 இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை மதியம் 12 மணியளவில் நடக்கிறது.
கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் நடக்கும் நிகழ்ச்சியில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். இதில், கொரோனா தடுப்பு முன்களப்பணியாளர்களான டாக்டர்கள். நர்சுகள், தூய்மைப்பணியாளர்கள் ஆகியோரை கவுரவிக்கும் வகையில் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி மீது விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
அதன்பின்னர் கொரோனா தடுப்பு முன்களப்பணியாளர்களை ஹெலிகாப்டரில் ஏற்றிச் சென்று கோவையை சுற்றி காண்பிக்கும் நிகழ்வும் நடக்கிறது.
நீலகிரி மாவட்டம் ஊட்டி சேட் நினைவு அரசு மகப்பேறு மருத்துவமனை யில் நடைபெறும் ஒத்திகை நிகழ்ச்சியை மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். ஒரு மையத்தில் 25 பேர் வீதம் கோவை, நீலகிரி மாவட்டங்களில் உள்ள 8 மையங்களில் மொத்தம் 200 பேருக்கு தடுப்பூசி ஒத்தகை நடத்தப்படும்.
கொரோனா தடுப்பூசி ஒத்திகை ஏற்பாடுகள் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விளக்கி கூறியதாவது:-
தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும்போது கொரோனா தடுப்பு பணியில் முன்களப்பணியாளர்களாக பணியாற்றிய டாக்டர்கள், நர்சுகள், தூய்மைப்பணியாளர்களுக்கு தான் முதலில் போடப்படும். இதற்கான ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடத்தப்படுகிறது. தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு பதிவு செய்வதற்காக பிரத்யேக செயலியில் (ஆப்) முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு முன்பதிவு செய்து கொண்டவர்களுக்குத்தான் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும்போது போடப்படும்.
இன்று நடக்கும் ஒத்திகையில் தடுப்பூசி யார் யாருக்கு போட வேண்டும் என்பதை அந்த செயலியில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு இந்த இடத்திற்கு எத்தனை மணிக்கு வர வேண்டும் என நேற்று மாலையே எஸ்.எம்.எஸ். (குறுந்தகவல்) அனுப்பப்படும். அந்த தகவலுடன் வருபவர்கள் மட்டுமே இன்று நடக்கும் ஒத்திகையில் பங்கேற்க முடியும்.
அப்போது அவர்களின் ஆதார் போன்ற அடையாள அட்டைகளை சரி பார்த்து உறுதி செய்யப்படுவார்கள். அவர்கள் அனைவரும் முன்களப்பணியாளர்களான டாக்டர்கள், நர்சுகள், தூய்மைப்பணியாளர்களாக இருப்பார்கள்.
அவர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னர் 2-வது அறையான தடுப்பூசி அறைக்கு செல்ல வேண்டும். அங்கு பயிற்சி பெற்ற நர்சு ஊசி போடுவது போல ஒத்திகை நடத்துவார்.
3-வதாக உள்ள கண்காணிப்பு (அப்சர்வேசன்) அறைக்கு செல்ல வேண்டும். தடுப்பூசி போட்டால் அதனால் ஏதாவது பக்க விளைவுகள் ஏற்படுகிறதா? என்பதை பார்ப்பதற்காக 30 நிமிடங்கள் அந்த அறையில் உட்கார்ந்திருக்க வேண்டும். பின்னர் அவர்கள் வீட்டுக்கு செல்லலாம்.
தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் போது என்னென்ன விதிமுறைகள், நடைமுறைகளை பின்பற்ற வேண்டுமோ அவை அனைத்தும் இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் பின்பற்றப்படும். ஆனால் தடுப்பூசி மட்டும் போட மாட்டார்கள். தடுப்பூசி போடப்பட்ட ஒருவருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டால் அவருக்கு முதலில் என்ன மாதிரியான முதல் உதவி சிகிச்சை செய்ய வேண்டும்? அவரை உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வதற்கான ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் தயார் நிலையில் ஒத்திகையின் போது நிறுத்தி வைக்கப்படும்.
தேர்தல் நடப்பதற்கு முன்பு ஒத்திகை எப்படி நடத்தப்படுகிறதோ அதைப் போல தடுப்பூசி ஒத்திகையும் நடத்தப்படும்.
தடுப்பூசி ஒத்திகை மையத்திற்கு முன்பு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருக்கும். ஒத்திகையில் கலந்து கொள்பவர்களின் முழுவிவரங்களை இணையதளத்தில் உடனுக்குடன் பதிவு செய்யவும் அறை வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. மின்சார வசதி இடையூறு இல்லாமல் ஒத்திகை தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.