சிவகாசி அருகே நீரில் மூழ்கி இறந்த சிறுவன் உடல் போலீசுக்கு ெதரியாமல் எரிப்பு; பெற்றோர் உள்பட 4 பேர் மீது வழக்கு
சிவகாசி அருகே நீரில் மூழ்கி இறந்த சிறுவனின் உடலை போலீசுக்கு தெரியாமல் எரித்த தாய், தந்தை உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மாணவன்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மாரனேரி அம்மாபட்டியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்களது மகன் முகேஷ் (வயது 7).
இவன் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான். தற்போது கொரோனா பரவல் காலகட்டம் என்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் சிறுவன் முகேஷ் அதே பகுதியில் உள்ள கல் கிடங்கில் தேங்கி இருந்த தண்ணீரில் குளித்ததாக கூறப்படுகிறது.
மூழ்கி பலி
அப்போது எதிர்பாராதவிதமாக கல் கிடங்கு தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்ததாக கூறப்படுகிறது. உடனே அவரது உறவினர்கள் சிறுவனின் உடலை மீட்டு சென்று எரித்து விட்டதாக கூறப்படுகிறது.
இயற்கைக்கு மாறான முறையில் யார் உயிரிழந்தாலும் போலீசுக்கு உரிய தகவல் தெரிவிக்க வேண்டிய நிலையில் முகேஷ் குடும்பத்தினர் போலீசுக்கு உரிய தகவல் கொடுக்காமல், பிரேத பரிசோதனை செய்யாமல் உடலை எரித்ததாகவும் புகார் எழுந்தது.
வழக்குப்பதிவு
இதுகுறித்து தகவல் அறிந்த அம்மாபட்டி ஊர் தலைவர் சுப்புகாளை மாரனேரி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
சிறுவன் முகேஷ் இறந்ததாக கூறப்படும் கல் கிடங்குக்கு சென்று ஆய்வு செய்தனர். பின்னர் உரிய தகவல் கொடுக்காமல் சிறுவன் உடலை எரித்ததாக சிறுவனின் தந்தை ராமகிருஷ்ணன், தாய் ஜெயலட்சுமி, உறவினர்கள் சுப்பிரமணியன், நாகராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.