செவிலியர்களுக்கு நைட்டிங் கேல் விருது மத்திய அரசு அறிவிப்பு
புதுச்சேரி செவிலியர்களுக்கு புளாரன்ஸ் நைட்டிங் கேல் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
புதுச்சேரி,
மத்திய அரசின் சுகாதாரத்துறை நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் ஆண்டுதோறும் சிறந்த சேவையாற்றும் செவிலியர்களுக்கு புளாரன்ஸ் நைட்டிங்கேல் பெயரில் விருது வழங்கி கவுரவித்து வருகிறது.
அதன்படி 2020-ம் ஆண்டுக்கான விருதுக்கு புதுச்சேரி தட்டாஞ்சாவடியை சேர்ந்த அனுராதா (46), நெட்டப்பாக்கம் மேட்டுத்தெருவைச் சேர்ந்த லதா (44) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
செவிலியர் அனுராதா இந்திராகாந்தி அரசு பொது மருத்துவமனையில் கடந்த 25 ஆண்டுகளாக இதயவியல் பிரிவில் பணியாற்றி வருகிறார். தற்போது அவர் செவிலிய அதிகாரியாக உள்ளார். செவிலியர் லதா கரையாம்புத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 23 ஆண்டுகளாக கிராமப்புற செவிலியராகப் பணியாற்றி வருகிறார்.
இவர்கள் இருவரும் வெளி நோயாளிகளுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்தல், சிறப்பாக பணியாற்றுதல் உள்ளிட்ட பிரிவுகளில் தங்களது பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர். இருவரும் ரத்ததானம் தொடர்ந்து செய்து வருகிறார்கள்.
இந்த விருதினை வழக்கமாக ஜனாதிபதி நேரடியாக வழங்கி வந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக காணொலிக்காட்சி மூலம் வழங்க மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. விருது வழங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என மத்திய அரசின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மத்திய அரசு விருதுபெற்றுள்ள செவிலியர்களுக்கு அந்தந்த மருத்துவமனை டாக்டர்கள், சக செவிலியர்கள், ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.