பெலகாவியில், தேர்தல் முன்விரோதம் காரணமாக கிராம பஞ்சாயத்து தலைவரின் சகோதரரை கொன்ற 6 பேர் கைது
பெலகாவியில், தேர்தல் முன்விரோதம் காரணமாக கிராம பஞ்சாயத்து தலைவரின் சகோதரரை கொலை செய்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெலகாவி,
கர்நாடகத்தில் கிராம பஞ்சாயத்து தேர்தல் கடந்த மாதம் (டிசம்பர்) 2 கட்டமாக நடைபெற்றது. அதுபோல, பெலகாவி மாவட்டத்திலும் கிராம பஞ்சாயத்து தேர்தல் நடந்திருந்தது. பெலகாவி மாவட்டம் ஹூக்கேரி தாலுகா சுல்தான்புரா கிராம பஞ்சாயத்துக்கும் தேர்தல் நடந்திருந்தது. இந்த தேர்தலில் பசீர் முல்லா, அவரது சார்பில் போட்டியிட்ட அனைவரும் வெற்றி பெற்றனர். இதையடுத்து, கடந்த மாதம் 30-ந் தேதி வெளியான தேர்தல் முடிவுக்கு பின்பு கிராம பஞ்சாயத்து தலைவராக பசீர் முல்லா தேர்வு செய்யப்பட்டார்.
அவரது வெற்றிக்கு, சகோதரர் சானூர் முல்லா தான் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து, பசீர் முல்லாவின் வெற்றியை கொண்டாடும் விதமாக கிராமம் முழுவதும் இனிப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த 30-ந் தேதி நள்ளிரவு சானூர் முல்லாவை மர்மநபர்கள் ஆயுதங்களால் தாக்கி கொலை செய்தார்கள். இதுகுறித்து ஹூக்கேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மேலும் கிராம பஞ்சாயத்து தேர்தல் முன்விரோதம் காரணமாக தான் சானூர் முல்லா கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.
மேலும் பசீர் முல்லாவை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்த சபீர் முல்லா, அவரது கூட்டாளிகள் தான் சானூர் முல்லாவை கொலை செய்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, இந்த கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த ஜகாங்கீர் முல்லா, சுல்தான் ஷாப், ஹசன்ஷாப், தஸ்தகீர் முல்லா, தவுசிப் முல்லா, மோசின் ஹாஜி ஆகிய 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 6 பேரும் சபீர் முல்லாவின் உறவினர்கள் மற்றும் கூட்டாளிகள் ஆவார்கள். கடந்த 30-ந் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு தேர்தலில் தோல்வி அடைந்த சபீர் முல்லாவின் வீட்டு முன்பாக நின்று சானூர் முல்லா, அவரது ஆதரவாளர்கள் நடனமாடியுள்ளனர்.
இதன் காரணமாக ஆத்திரமடைந்தவர்கள் சானூர் முல்லாவை ஆயுதங்களால் தாக்கி கொன்றது தெரியவந்தது. கைதான 6 பேர் மீதும் ஹூக்கேரி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த கொலையில் தலைமறைவாக உள்ள சபீர் முல்லா உள்ளிட்ட மேலும் சிலரை போலீசார் தேடிவருகிறார்கள்.