திருவள்ளூரில் அரசு உத்தரவை மீறி வாகனங்களில் பொருத்திய பம்பர் கம்பிகள் அகற்றம்; உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை
4 சக்கர வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் சமயத்தில் அந்த வாகனங்களின் முன்பு பொருத்தப்பட்டிருக்கும் பம்பர் கம்பிகள் மீது வாகனம் மோதுவதால் சென்சார் வேலை செய்யாமல் வாகனத்தின் உள்ளே இருக்கும் பாதுகாப்பு பலூன் செயல்படாமல் போகிறது.
இதன் காரணமாக விபத்துக்களில் சிக்கும் நபர்கள் பரிதாபமாக இறந்து விடுகிறார்கள். இச்சம்பவத்தை தடுக்கும் விதமாக தமிழக அரசு வாகனங்களில் பம்பர் கம்பிகளை வாகன ஓட்டிகள் உடனடியாக அகற்ற உத்தரவிட்டது.
இந்தநிலையில், திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலர் மோகன் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் கே.பன்னீர்செல்வம் ஆகியோர் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த 30-க்கும் மேற்பட்ட கார்களை நிறுத்தி சோதனை நடத்தினார். இதில் 15 கார்களில் அரசு அறிவித்த உத்தரவை மீறி பம்பர் கம்பிகள் பொருத்தப்பட்டு இருந்தது. அதை போக்குவரத்து அதிகாரிகள் அவற்றை அகற்றி 7 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதித்தனர்.
கடந்தாண்டு ஜனவரி முதல் டிசம்பர் 31-ந் தேதி வரை ஓட்டுனர் உரிமம் இல்லாமலும், அதிகபாரம், அதிக பயணிகளை ஏற்றுதல், செல்போன் பேசியபடி வாகனங்கள் ஓட்டியது உள்ளிட்ட அரசின் விதிமுறைகளை மீறி இயக்கிய 339 வாகனங்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வாகனங்களுக்கு வரி மற்றும் அபராதமாக ரூ.18 லட்சத்து 920 வசூல் செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.