காஞ்சீபுரத்தில் ஆங்கில புத்தாண்டு பூஜைகள்; கோவில்களில் பக்தர்கள் வழிகாட்டு நெறிமுறைகளுடன் சாமி தரிசனம்
ஆங்கில புத்தாண்டையொட்டி கோவில்களில் பக்தர்கள் வழிகாட்டு நெறிமுறைகளுடன் சாமி தரிசனம் செய்தனர்.
சாமி தரிசனம்
ஆங்கில புத்தாண்டையொட்டி புகழ்பெற்ற காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோவில், ஏகாம்பரநாதர் கோவில், வரதராஜ பெருமாள் கோவில், குமரகோட்டம் முருகன் கோவில், கச்சபேஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஏதுவாக கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் இந்து சமய அறநிலையத்துறையினரால் மேற்கொள்ளப்பட்டது.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் வெப்ப பரிசோதனை மேற்கொண்ட பின்னரே சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். மேலும் பக்தர்கள் அதிக அளவில் கூடும் கோவில்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
நேற்று காலை 6 மணி முதல் பக்தர்கள் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து சாமி தரிசனம் செய்தனர்.
காஞ்சீபுரத்தை அடுத்த முத்தியால்பேட்டை பிரசன்ன ஆஞ்சநேயர் கோவிலில் சாமிக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
நந்திவரம்
செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் கோவிந்தராஜபுரம் 4-வது தெருவில் உள்ள ஆனந்த விநாயகர் கோவிலில் ஆங்கில புத்தாண்டையொட்டி பொதுமக்கள் கொரோனா தொற்றில் இருந்து விடுபட சிறப்பு பிரார்த்தனை, அபிஷேகம், ஆராதனை, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளி கடைபிடித்து சாமி தரிசனம் செய்தனர். சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொண்ட பொதுமக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
குபேர பட்டினம்
காஞ்சீபுரம் வெள்ளகேட் பகுதி குபேரபட்டினத்தில் உள்ள ராஜகுபேர சாமி கோவிலி்ல் ஆங்கில புத்தாண்டையொட்டி ஏராளமான பக்தர்கள் வெளியூர்களில் இருந்து இருமுடி எடுத்து வந்து சாமி தரிசனம் செய்தனர்.
ராஜகுபேரருக்கு சிறப்பு அபிஷேகமும், அதனை தொடர்ந்து ரூபாய் நோட்டுகளால் தனாபிஷேகமும் நடந்தது. தொடர்ந்து மூலவர் ராஜகுபேரர் தங்ககவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கோவில் வளாகத்தில் ராஜகுபேர சித்தர் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். வந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
அச்சரப்பாக்கம்
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோவிலில் மார்கழி மாதத்தில் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. ஆங்கில புத்தாண்டையொட்டி நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன.
நேற்று அதிகாலை முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.