திருப்பூர் செல்லம் நகரில் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்ட பொதுமக்கள் - மறியலுக்கு முயன்ற 11 பேர் கைது

திருப்பூர் செல்லம் நகரில் டாஸ்மாக் கடையை உடனடியாக மூடக்கோரி கொட்டும் மழையில் நனைந்தபடி பொதுமக்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.மேலும் மறியலுக்கு முயன்ற 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-01-01 17:42 GMT
திருப்பூர்,

திருப்பூர் மாநகராட்சி 56-வது வார்ட்டுக்கு உட்பட்ட செல்லம்நகரில் டாஸ்மாக் கடை(எண்.1965) குடியிருப்பு பகுதியில் உள்ளது. இந்த டாஸ்மாக் கடையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் நேற்று காலை 10.30 மணி அளவில் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடைக்கு முன் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் திரண்டனர். பெண்கள் அதிக அளவில் குவிந்தனர். இதைத்தொடர்ந்து மத்திய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் மற்றும் போலீசார் கடைக்கு முன்பு பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்.

சிறிது நேரத்தில் மழை கொட்டித்தீர்த்தது. கொட்டும் மழையில் நனைந்தபடி பெண்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு, கடையை வேறு இடத்துக்கு மாற்றக்கோரி கோ‌‌ஷங்கள் எழுப்பினார்கள். கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என்று பெண்கள் ஆவேசமாக போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் பற்றி அறிந்ததும் திருப்பூர் தெற்கு போலீஸ் உதவி கமி‌‌ஷனர் நவீன்குமார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது பெண்கள் கூறியதாவது:-

செல்லம் நகர் மெயின் ரோட்டில் இந்த டாஸ்மாக் கடை குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது. முருகம்பாளையம், பாரக்காடு, சூரியாநகர், பகவதி நகர் ஆகிய பகுதிகளின் மையப்பகுதியில் இந்த கடை உள்ளது. அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கோவில்கள் கடைக்கு அருகிலேயே உள்ளன. சிறிய பனியன் நிறுவனங்கள் இந்த பகுதியில் உள்ளதால் பெண்கள் அந்த நிறுவனங்களில் பணியாற்றி வருகிறார்கள். டாஸ்மாக் கடை இருப்பதால் அந்த வழியாக செல்ல பெண்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகிறார்கள்.

கடை ரோட்டோரம் அமைந்து இருப்பதால் பள்ளி மாணவர்கள் அந்த வழியாக செல்லும்போது சில அறுவறுக்கத்தக்க நிகழ்வுகளை பார்க்க வேண்டியுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட விதிமுறை மீறி இந்த டாஸ்மாக் கடையில் மது விற்பனை நடக்கிறது. இந்த டாஸ்மாக் கடையை இங்கிருந்து அப்புறப்படுத்தி வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று கலெக்டர், டாஸ்மாக் நிர்வாகம் மற்றும் மக்கள் பிரதிநிதிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை கடையை மூடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் வேறுவழியில்லாமல் முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுகிறோம். கடையை உடனடியாக மூட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

கோரிக்கைகள் தொடர்பான மனுவை கலெக்டருக்கு கொடுக்குமாறும், கலெக்டர் தான் இதுகுறித்து முடிவை எடுப்பார் என்றும் போலீசார், அங்கிருந்த மக்களிடம் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் கலைந்து செல்லாமல் கொட்டும் மழையில் கடைக்கு முன்பு நின்று தொடர்ந்து கோ‌‌ஷம் எழுப்பி வந்தனர். டாஸ்மாக் உதவி மேலாளர் அர்ஜூன், அங்கு வந்து பேசினார். அப்போது மக்கள், இந்த கடையை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று கூறி கலைந்து செல்ல மறுத்துவிட்டனர்.

மதியம் 2 மணி வரை போராட்டம் தொடர்ந்தது. அதன்பிறகு துணை தாசில்தார் அருள்முருகன் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். கோரிக்கையை மனுவாக கொடுத்தால் கலெக்டரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக கூறினார். மனுவை கலெக்டரிடம் கொடுத்து நடவடிக்கை எடுக்கும் வரை இந்த டாஸ்மாக் கடையை திறக்கக்கூடாது என்றும், அதற்குள் கடையை திறந்தால் மீண்டும் கடை முன்பு போராட்டம் நடத்தப்படும் என்று பொதுமக்கள் கூறினார்கள். இதைத்தொடர்ந்து மதியம் 2.30 மணிக்கு அனைவரும் கலைந்து சென்றனர்.

மேலும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு கலெக்டருக்கு மனு அளித்தனர். கடையை திறக்க கூடாது என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியிருந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை 6.30 மணி அளவில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் கடை முன்பு திரண்டனர். பெண்கள் மனித சங்கிலி அமைத்து டாஸ்மாக் கடை முன் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதைத் தொடர்ந்து மத்திய போலீசார் அங்கு விரைந்து வந்து மறியலுக்கு முயன்றவர்களில் இரண்டு பெண்கள் உட்பட 11 பேரை கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அதன் பிறகு டாஸ்மாக் கடை மூடப்பட்டது.

மேலும் செய்திகள்