எடப்பாடி பழனிசாமி மருத்துவ புரட்சியை ஏற்படுத்தி வருகிறார் - அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேச்சு

தமிழகம் முழுவதும் மினி கிளினிக்குகளை திறந்து வைப்பதன் மூலம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மருத்துவ புரட்சியை ஏற்படுத்தி வருவதாக அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறினார்.

Update: 2021-01-01 15:56 GMT
சாத்தூர்,

சாத்தூர் ஒன்றியம் படந்தால் கிராமத்தில் அம்மா மினி கிளினிக்கை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்து கர்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார்.

நிகழ்ச்சியில் விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், சாத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சண்முக்கனி, சாத்தூர் நகர செயலாளர் இளங்கோவன், கிழக்கு மாவட்ட துணை செயலாளர் இந்திரா கண்ணன், மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் பூபாலன், மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் ராம் கணேஷ், வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்குமார், மாவட்ட மீனவர் அணி செயலாளர் மாணிக்கம், தகவல் தொழில்நுட்ப பிரிவு விக்னேஸ்வரன், ஊராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி, மாவட்ட பிரதிநிதி கோபாலகிருஷ்ணன், மாவட்ட பேரவை நடராஜன், பேரவை கிழக்கு பால்ராஜ் மற்றும் அரசு அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசியதாவது:-

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை பெற்றுக் கொடுத்தவர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. இதனால் இன்றைக்கு 313 ஏழை மாணவ, மாணவிகள், மருத்துவ படிப்பில் இடம் பெற்று படிக்க போயிருக்கிறார்கள். தமிழ் வழிக்கல்வியில் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி அரசாணை வெளியிட்டு, தமிழர்களுக்கு வேலை வாய்ப்பிலே முன்னுரிமை கொடுத்தது அ.தி.மு.க. அரசு.

இதையெல்லாம் தாண்டி பொங்கல் பரிசாக, எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு 2 கோடியே 6 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ரூ.2500 மற்றும் பொங்கல் பொருட்களை பரிசாக அள்ளித்தந்துள்ளார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உங்களுக்காக உழைக்கின்ற உன்னதமான தலைவன். அவருக்கு நீங்கள் பக்கபலமாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் பேசினார்.

ராஜபாளையம் முடங்கியாறு சாலையில் உள்ள குமரன் தெரு, சுந்தரராஜபுரம் ஆகிய இடங்களிலும் அம்மா மினி கிளினிக்குகளை அமைச்சர் திறந்து வைத்து குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு தாய்சேய் நல பெட்டகத்தை வழங்கினார். சந்திரபிரபா எம்.எல்.ஏ., பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவர் வனராஜ், பொதுக்குழு உறுப்பினர் பாபுராஜ், நகர செயலாளர் ராணா பாஸ்கர் ராஜ், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாவட்ட செயலாளர் வக்கீல் துரை முருகேசன், மாவட்ட பேரவை செயலாளர் கிருஷ்ணராஜ், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ராதாகிருஷ்ணன் ராஜா, அவைத் தலைவர் பரமசிவம், நகர துணைச் செயலாளர் பால்ராஜ், மாவட்ட துணைச்செயலாளர் அழகு ராணி மற்றும் நகர நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசும்போது, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் மினி கிளினிக்குகளை திறந்து மருத்துவ புரட்சியை ஏற்படுத்தி வருகிறார். தமிழக அரசு பொங்கல் பரிசாக வழங்கும் ரூ.2,500ஐ கல்வி, வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்கள் வாங்குவது போன்ற அத்தியாவசிய செலவுகளுக்கு மட்டும் பயன்படுத்துங்கள். என்று கூறினார்.

மேலும் செய்திகள்