பல்வேறு இடங்களில் இடைவிடாமல் பெய்த மழை; ஈரோட்டில் மின்சாரம் தாக்கி நாய் பலி

ஈரோடு மாவட்டத்தின் பல்ேவேறு இடங்களில் இடைவிடாமல் மழை பெய்தது. ஈரோட்டில் மின்சாரம் தாக்கியதில் நாய் பலியானது.

Update: 2021-01-01 05:41 GMT
மின்சாரம் தாக்கி இறந்து கிடந்த நாய்; ஈரோட்டில் மழையில் நனையாமல் இருப்பதற்காக குடை பிடித்த படி சென்றவர்கள்
மழை
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் புரெவி புயலின்போது பலத்த மழை கொட்டியது. அதன்பிறகு மழை பொழிவு மிகவும் குறைவாக இருந்தது. ஒருசில இடங்களில் மட்டும் மழை பெய்தது.

நேற்று முன்தினம் மாலையில் திடீரென வானில் கருமேகங்கள் திரண்டன. அப்போது பலத்த மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சில இடங்களில் மழைதூறல் மட்டும் காணப்பட்டது. இந்தநிலையில் நேற்று காலை 7 மணிஅளவில் மழை பெய்ய தொடங்கியது.

சேறும், சகதியுமாக மாறிய சாலை
ஈரோடு மாநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதி முழுமைக்கும் மழை பெய்தது. அவ்வபோது பலத்த மழையாகவும் கொட்டியது. காலையில் தொடங்கிய மழை மாலை வரையும் தொடர்ந்து நிற்காமல் பெய்து கொண்டே இருந்தது.

இதனால் வேலைக்கு செல்பவர்கள், கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டனர். அவர்கள் குடைபிடித்தபடியும், ரெயின் கோர்ட்டு அணிந்தபடியும் சென்றதை காணமுடிந்தது.

இடைவிடாமல் மழை பெய்து கொண்டே இருந்ததால் அவசர தேவைக்காக மட்டுமே பொதுமக்கள் வெளியே சென்றார்கள். இதனால் பொதுமக்கள் பலர் வீடுகளிலேயே முடங்கினார்கள். எனவே முக்கிய சாலைகளும் போக்குவரத்து நெரிசலின்றி வெறிச்சோடியே காணப்பட்டது.

ஈரோடு பகுதியில் பாதாள சாக்கடை, ஊராட்சிக்கோட்டை கூட்டுக்குடிநீர் திட்டம், மின்சார கேபிள் பதிக்கும் பணிகள் உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகள் நடந்து வருவதால், பல்வேறு இடங்களில் குழிகள் தோண்டப்பட்டு உள்ளன.

சாலைகள் சீரமைக்கப்படாத இடங்களில் சேறும், சகதியுமாக மாறின. இதனால் பொதுமக்கள் நடந்து செல்வதற்கே மிகவும் சிரமப்பட்டார்கள்.

நாய் பலி
ஈரோடு கந்தசாமி வீதியில் மின்சார கேபிள் பதிக்கும் பணிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்தது. அங்கு சாலையோரமாக மின்கேபிள்கள் போடப்பட்டு உள்ளன.

இந்தநிலையில் நேற்று பெய்த மழையால் அந்த பகுதியில் தண்ணீர் தேங்கி உள்ளது. அப்போது அங்கு சென்ற நாய் ஒன்று, மின்சாரம் தாக்கி பலியானது. இதைபார்த்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் உடனடியாக மின்சார வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் மின் வாரிய அதிகாரிகளும், மாநகராட்சி அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

அங்கு மின்வினியோகத்தை தடை செய்த பிறகு இறந்த நாய் அப்புறப்படுத்தப்பட்டது.

மேலும், மின்கசிவு ஏற்பட்ட இடத்தை மின்வாரிய ஊழியர்கள் சரி செய்தனர். மின்சாரம் தாக்கி நாய் இறந்து கிடந்ததை பார்த்து பொதுமக்கள் சுதாரித்து கொண்டதால், அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். இதேபோல் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, சிவகிரி, அந்தியூர், டி.என்.பாளையம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.

மேலும் செய்திகள்