திண்டிவனத்தில் செயல்வீரர்கள் கூட்டம் நிர்வாகிகள் ஒன்றிணைந்து அ.தி.மு.க. வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும்

நிர்வாகிகள் ஒன்றிணைந்து அ.தி.மு.க. வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று திண்டிவனத்தில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் சி.வி்.சண்முகம் பேசினார்.

Update: 2021-01-01 05:23 GMT
திண்டிவனம்,

திண்டிவனம்-சென்னை சாலையில் அ.தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு நகர செயலாளர் வக்கீல் தீனதயாளன் தலைமை தாங்கினார். மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் சேகர், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் முகமது ஷெரீப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

சாதாரண தொண்டன் கூட முதல்-அமைச்சராகும் வாய்ப்பு அ.தி.மு.க.வில் மட்டுமே உள்ளது. அதற்கு உதாரணமாக திகழ்பவர் தமிழகத்தின் தற்போதையமுதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. தி.மு.க.வில் உள்ள தொண்டன் ஒரு போதும் முதல்-அமைச்சராக முடியாது.

அரசின் சலுகை

தி.மு.க.வில் பொறுப்பில் இருந்தால் அடிமைதான். தி.மு.க.வை அழிப்பதற்கு வேறு யாரும் தேவையில்லை, மு.க. ஸ்டாலினின் நாக்கு மட்டுமே போதும்.

தற்போது உள்ள நிர்வாகிகளுக்கு பிறகு கட்சியை வழிநடத்த போகிறவர்கள் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பாசறையை சேர்ந்தவர்கள்தான்.

கடந்த 10 ஆண்டுகளில் மக்களுக்கு ஏதோ ஒரு வகையில் அரசின் சலுகைகளை வழங்கி உள்ளோம். மேலும் பொதுமக்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லாமல் ஆட்சி செய்து உள்ளோம். இதை பொதுமக்களிடம் தெரிவித்து வாக்குகளை பெற வேண்டும். கடந்தகால தி.மு.க. ஆட்சியில் கொலை, கொள்ளை, கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் பொதுமக்கள் அவதியுற்றனர்.

கோர்ட்டில் வழக்கு

நிர்வாகிகள் அனைவரும் ஒன்றிணைந்து நமது வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும்.

தேர்தலின்போது கட்சியின் அனைத்து பிரிவுகளை சேர்ந்தவர்களையும் சேர்த்து பூத் கமிட்டி அமைக்க வேண்டும். பொங்கல் பரிசாக ரேஷன் கார்டுக்கு ரூ.2,500 வழங்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம். மு.க. ஸ்டாலின் 5,000 ரூபாய் வழங்கவேண்டும் என கூறுகிறார். ஆனால் கோர்ட்டில் பொங்கல் பரிசாக ரூ.2,500 வழங்கக் கூடாது என வழக்கு தொடுத்துள்ளார். தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை தி.மு.க. ஆட்சியில் இல்லாதபோது எதிர்ப்பது வாடிக்கையாகிவிட்டது. நீட் தேர்வு இருப்பதால்தான் தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு தற்போது 433 மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர். இவ்வாறு அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் எஸ்.பி.ராஜேந்திரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் தேவநாதன், தளபதிரவி, நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் ரூபன் ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் பிரகாஷ் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்