தஞ்சை மாவட்டத்தில் பரவலாக மழை கும்பகோணம், மஞ்சளாறில் அதிகபட்சமாக 27 மி.மீ. பதிவானது

தஞ்சை மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. கும்பகோணம், மஞ்சளாறில் அதிகபட்சமாக 27 மி.மீ. பதிவானது.

Update: 2021-01-01 04:40 GMT
தஞ்சாவூர்,

தமிழகத்தில் தற்போது வடகிழக்குப்பருவமழை பெய்து வருகிறது. இந்த ஆண்டு தாமதமாக மழை தொடங்கினாலும் இன்னும் மழை நீடித்து வருகிறது. குறிப்பாக நிவர், புரெவி புயல் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. அதிலும் புரெவி புயல் டெல்டா பகுதி மக்களின் வாழ்க்கையை புரட்டி போட்டு விட்டது. இதனால் நெற்பயிர்கள், மக்காச்சோளம், நிலக்கடலை உள்ளிட்ட பயிர்கள் பாதிக்கப்பட்டன.

இருப்பினும் தொடர்ந்து அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மழை இன்றி காணப்பட்டது. ஆனால் பனியின் தாக்கம் கடுமையாக இருந்தது. அதிகாலை நேரங்களில் சாரல் மழைபோல பனிப்பொழிவு காணப்பட்டது. இதனால் கடும் குளிரும் நிலவி வந்தது.

தண்ணீர் தேங்கியது

இந்த நிலையில் நேற்று அதிகாலை முதலே மழை பெய்யத்தொடங்கியது. லேசான தூறலுடன் காணப்பட்ட மழை 5 மணிக்கு பின்னர் பலத்த மழையாக கொட்டியது. காலை 9.30 மணி வரை மழை பெய்து கொண்டே இருந்தது. அதன் பின்னர் விட்டு, விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. மதியத்துக்குப்பிறகு பின்னர் மழை இன்றி வெயில் காணப்பட்டது.

இந்த மழையினால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி காணப்பட்டது. அறுவடைக்கு தயாராக இருந்த வயல்கள் மழை காரணமாக மேலும் தாமதமானது. தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம், பாபநாசம், மஞ்சளாறு, திருவிடைமருதூர், அதிராம்பட்டினம், பேராவூரணி, திருக்காட்டுப்பள்ளி, கல்லணை உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.

மழை அளவு

தஞ்சை மாவட்டத்தில் நேற்று காலை 7 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

கும்பகோணம் 27, மஞ்சளாறு 27, திருவிடைமருதூர் 19, அதிராம்பட்டினம் 11, திருக்காட்டுப்பள்ளி 11, கல்லணை 11, பேராவூரணி 9, தஞ்சை 8, அய்யம்பேட்டை 8, திருவையாறு 7, ஈச்சன் விடுதி 5, வல்லம் 4, நெய்வாசல்தென்பாதி 4, வெட்டிக்காடு 4, பூதலூர் 3, ஒரத்தநாடு 3, மதுக்கூர் 3, பட்டுக்கோட்டை 2.

மேலும் செய்திகள்