ஊட்டியில் பரவலாக மழை; குன்னூரில் சாலையில் திடீரென்று மண்சரிந்தது
காலநிலை மாற்றம் காரணமாக ஊட்டியில் பரவலாக மழை பெய்தது. இதனால் குன்னூரில் சாலையில் திடீரென்று மண் சரிந்து விழுந்தது.
பரவலாக மழை
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் வடகிழக்கு பருவமழையை தொடர்ந்து உறைபனி தாக்கம் காணப்பட்டது. பின்னர் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டதால் கடந்த 2 நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. இந்த நிலையில் நேற்று காலையில் இருந்தே வானம் மேகமூட்டத்துடன் மப்பும், மந்தாரமுமாக இருந்தது.
மதியம் திடீரென சாரல் மழை பெய்தது. இந்த மலை தொடர்ந்து ஒரு மணி நேரம் பரவலாக பெய்தது. இதனால் சுற்றுலா தலங்களுக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் மழையில் நனையாமல் இருக்க குடைகளை பிடித்தபடி நடந்து சென்றனர்.
சாலையில் மண்சரிவு
மேலும் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் மழைக்கு ஒதுங்கி நின்றனர். ஊட்டியில் நேற்று கடும் பனிமூட்டம் நிலவியது. குளிர் காரணமாக பொதுமக்கள் உல்லன் ஆடைகளை அணிந்தனர். உறை பனி காலத்தில் திடீரென பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அதுபோன்று குன்னூரில் கடந்த 2 நாட்களாக மிதமான மழை பெய்து வந்தது. இந்த நிலையில் நேற்று காலை பலத்த மழை பெய்தது. இந்த மழை காரணமாக குன்னூர்-கோத்தகிரி சாலையில் உள்ள குடும்பநலத்துறை ஆஸ்பத்திரி அருகே சாலையில் திடீரென்று மண் சரிவு ஏற்பட்டது.
மணல் மூட்டைகள்
இது குறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் மண் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து மண் சரிந்து சாலை சேதமான பகுதியை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.