தண்ணீர் தொட்டியில் வீசி பச்சிளம் பெண் குழந்தையை கொன்ற தாய் கைது

பச்சிளம் பெண் குழந்தையை தண்ணீர் தொட்டியில் வீசி கொன்ற தாயை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-01-01 01:21 GMT
வசாய், 

பால்கர் மாவட்டம் நய்காவ் அருகே பஞ்சு தீவு திடல் பகுதியில் வசித்து வருபவர் நிர்மலா(வயது28). இவருக்கு கடந்த மாதம் இரட்டை பெண் குழந்தை பிறந்து இருந்தது. இரண்டும் பெண் குழந்தையாக பிறந்ததால் மாமனார், மாமியார் நிர்மலாவை கடும் சொற்களால் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் நிர்மலா மனஉளைச்சல் அடைந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் பிறந்த பெண் குழந்தைகளில் ஒரு குழந்தை காணாமல் போனதாக வசாய் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் படி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையில் வீட்டில் இருந்த தண்ணீர் தொட்டியில் காணாமல் போன பெண் குழந்தை பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் போலீசார் அங்கு சென்று பெண் குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தொடர்பாக நிர்மலாவிடம் விசாரித்தனர். இதில் அவர் தான் தனது குழந்தையை தண்ணீர் தொட்டியில் வீசி கொன்றதாக போலீசாரிடம் ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து நிர்மலாவை கைது செய்தனர்.

கணவர் வீட்டாரின் கடும் சொற்களுக்காக பெற்ற தாயே குழந்தையையே தண்ணீர் தொட்டியில் வீசி கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்