காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே குடிசை எரிந்து சேதம்

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த அரசாணி மங்கலம் கங்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 37).

Update: 2021-01-01 00:43 GMT
கூலித்தொழிலாளி. இவரது மனைவி நளினி. 2 குழந்தைகள் உள்ளனர் ஆனந்தன் விபத்தில் கால்கள் முறிந்து சிகிச்சை பெற்று வீட்டில் இருந்து வருகிறார். நளினி வீட்டுக்கு அருகே உள்ள உறவினர் வீட்டுக்கு குழந்தைகளுடன் சென்றிருந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் திடீரென வீட்டுக்கு மேலே சென்று கொண்டிருந்த மின்வயர்கள் ஒன்றுடன் ஒன்று உரசி தீப்பொறி உருவாகியுள்ளது. தீப்பொறி குடிசையில் பட்டதும் தீ மளமளவென பரவியது.

ஆனந்தன் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று கூச்சலிட பொதுமக்கள் அவரை மீட்டனர். ஆனந்தனின் வீடு முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது. அங்கு இருந்த ரூ.70 ஆயிரம், 4 பவுன் நகைகள், வீட்டு பத்திரம் மற்றும் அரசு ஆவணங்கள் முற்றிலும் எரிந்து சாம்பலானது.

இது குறித்து தகவல் கிடைத்ததும் உத்திரமேரூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர். வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டரையும் பத்திரமாக மீட்டனர்.

மேலும் செய்திகள்