கரூர் சக்திநகரில் துர்நாற்றத்துடன் கருப்பு நிறத்தில் வெளியேறிய நீரால் பரபரப்பு மாசு கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் விசாரணை

கரூர் சக்திநகரில் குழாய் உடைந்து துர்நாற்றத்துடன் கருப்பு நிறத்தில் நீர் வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து மாசு கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-01-01 00:26 GMT
கரூர்,

கரூர் சின்னஆண்டாங்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஏராளமான சாயப்பட்டறைகள் இயங்கி வந்தன. இதில் இருந்து வெளியேறும் சாயக்கழிவு நீரை சோழன்நகர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சுத்திகரிப்பு நிலையத்திற்கு குழாய் மூலம் எடுத்து செல்லப்பட்டு, சுத்திகரித்து ஆற்றில் வெளியேற்றப்பட்டன. இந்நிலையில் சாயக்கழிவு நீரால் நிலத்தடி நீர்மட்டம் மாசு ஏற்படுகிறது. எனவே சாயப்பட்டறைகளை மூட வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து சாயக்கழிவு நீரை ஜீரோ டிஸ்சார்ஜ் முறையில், சுத்திகரித்து வெளியிடாத சாய ஆலைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் கரூர் நகரை சுற்றி இருந்த 100-க்கும் மேற்பட்ட சாய ஆலைகள் மூடப்பட்டன. மேலும் சோழன் நகரில் இயங்கி வந்த சுத்திகரிப்பு நிலையமும் மூடப்பட்டது.

துர்நாற்றத்துடன் வெளியேறிய நீர்

இந்நிலையில் நேற்று காலை முதல் கரூர் நகரப்பகுதிகளில் லேசான துறலுடன் மழை பெய்து வந்தது. இந்தநிலையில் கரூர் ஸ்டேட்பேங்க் காலனி சக்திநகர் மெயின்ரோடு அருகே ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த சாயக்கழிவுநீர் வெளியேற்றப்படும் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அதில் இருந்து கருப்பு நிறத்தில் துர்நாற்றத்துடன் நீர் வெளியேறி, அப்பகுதியில் உள்ள பட்டா இடங்களில் புகுந்தது. இதனால் அப்பகுதி குடியிருப்பு வாசிகள் உடனடியாக துறை அதிகாரிக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அந்த நீரை கழிவுநீர் வாய்க்காலில் செல்ல ஏற்பாடு செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மாசு கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் கூறுகையில், அந்த நீரை சேகரித்து சோதனை செய்ததில், அதன் உப்பு தன்மை 400 டி.டி.எஸ். உள்ளது. சாயக்கழிவுநீராக இருந்தால் அதன் உப்பு தன்மை 4000 முதல் 5000 டி.டி.எஸ். வரை இருக்கும். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.

மேலும் செய்திகள்