வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்தம் குறித்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் சிறப்பு பார்வையாளர் ஆலோசனை - ஒத்துழைப்பு அளிக்க வேண்டுகோள்
நடைபெறவிருக்கின்ற சட்டமன்ற தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிடுவதில் அரசியல் கட்சியினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் சிறப்பு பார்வையாளர் சிஜி தாமஸ் வைத்யன் கேட்டுக்கொண்டார்.
விருதுநகர்,
விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்தம் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் கண்ணன் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த முகாம் சிறப்பு பார்வையாளர் சிஜி தாமஸ் வைத்யன் கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:-
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் வாக்காளர் பட்டியலில் இரட்டைப்பதிவு உடைய வாக்காளர்கள் பெயர் நீக்கம் செய்தல், 21 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்களை சேர்த்தல் படிவங்களை கவனமாக ஆய்வு செய்தல், ராஜபாளையம் பகுதியில் போக்குவரத்து வசதி இல்லாத கிராமங்களில் மக்களின் நலன் கருதி அவர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகே புதிய வாக்குக்சாவடி அமைத்தல் போன்ற ஆலோசனைகளை அரசியல் கட்சி பிரதிநிதிகள் தெரிவித்தீர்கள். இது தொடர்பாக உரிய முறையில் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இம்மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்தத்திற்கு அரசியல் கட்சியினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி மங்கள ராமசுப்பிரமணியன், சிவகாசி சார் ஆட்சியர் தினேஷ்குமார், விருதுநகர் மற்றும் ராஜபாளையம் எம்.எல்.ஏ.க்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள், வாக்குப்பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.