கள்ளத்தொடர்பு விவகாரத்தில் பயங்கரம்: ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி குத்திக் கொலை மகனை கைது செய்து போலீஸ் விசாரணை
பெங்களூருவில் கள்ளத்தொடர்பு விவகாரத்தில் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி குத்திக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது மகனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூரு,
பெங்களூரு பாரதிநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட வங்கி குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் அமரநாத் (வயது 61). இவர், வங்கி ஒன்றில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்று விட்டார். மராட்டிய மாநிலம் மும்பையில் அமரநாத்திற்கு சொந்தமான வீடு உள்ளது. அங்கு அவர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். சமீபத்தில் தான் பாரதிநகர் குடியிருப்புக்கு அவர் வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், குடியிருப்பில் உள்ள வீட்டில் பலத்த கத்திக்குத்து காயங்களுடன் அமரநாத் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதை பார்த்து குடியிருப்பில் வசிப்பவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி பாரதிநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து அமரநாத்தின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். தகவல் அறிந்ததும் கிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் சரணப்பா சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
அப்போது அமரநாத்தை, அவரது மகன் மனங்க் (27) என்பவர் தான் குத்திக் கொலை செய்தது தெரியவந்துள்ளது. அமரநாத்திற்கு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி மனங்கிற்கு தெரியவந்தது. இதனால் அவர், கடந்த 3 நாட்களுக்கு முன்பு மும்பையில் இருந்து பெங்களூருவுக்கு வந்துள்ளார். மேலும் தந்தைக்கு உள்ள கள்ளத்தொடர்பு மற்றும் சொத்தை பிரித்து கொடுக்கும்படி கேட்டு அமரநாத்திடம் மனங்க் சண்டை போட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த அவர் தனது தந்தையை குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.
மேலும் மனங்க் பி.டெக் பட்டதாரி என்றும், அவர் போதைப்பொருட்களுக்கு அடிமையாகி இருந்ததாகவும், போதையில் தனது தந்தையை அவர் கொலை செய்திருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பாரதிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனங்கை கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.