கொரோனா பரவல் அதிகரிக்காவிட்டால் மின்சார ரெயிலில் அனைத்து பயணிகளுக்கும் அனுமதி அளிக்கப்படும் மந்திரி ராஜேஷ் தோபே தகவல்
கொரோனா பரவல் அதிகரிக்காவிட்டால் மின்சார ரெயிலில் அனைத்து பயணிகளுக்கும் அனுமதி அளிக்கப்படும் என்று மந்திரி ராஜேஷ் தோபே கூறினார்.
மும்பை,
மும்பை போக்குவரத்தின் உயிர்நாடி மின்சார ரெயில்கள் என்றால் மிகையல்ல. மின்சார ரெயிலில் தினமும் சுமார் 80 லட்சம் பேர் பயணிப்பது வழக்கம். ஆனால் கொரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்ட மின்சார ரெயில்கள், பின்னர் ஓடத் தொடங்கிய பிறகு, அதன் சேவை படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அத்தியாவசிய ஊழியர்கள் மற்றும் பெண்கள் உள்பட விலக்கு அளிக்கப்பட்ட பிரிவினர் மட்டுமே பயணிக்க இதுநாள் வரை அனுமதிக்கப்பட்டு வருகிறது.
அனைத்து பயணிகளையும் அனுமதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் அரசு இன்னும் இறுதி முடிவை எடுக்காமல் உள்ளது. புத்தாண்டு முடிந்த பிறகாவது அனுமதி கிடைக்கும் என்று மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
மின்சார ரெயில்கள் மும்பை போக்குவரத்தின் உயிர்நாடி என்பதை உணர முடிகிறது. கொரோனா பரவல் அதிகரிக்காவிட்டால், மின்சார ரெயில்களில் அனைத்து பயணிகளையும் அனுமதிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும். புத்தாண்டையொட்டி நிலைமையை அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. சூழலை பொறுத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.