கும்மிடிப்பூண்டி அருகே போலீஸ்காரரை தாக்கிய தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் கைது; மேலும் 2 பேருக்கு வலைவீச்சு

கும்மிடிப்பூண்டி அருகே போலீஸ்காரர் தாக்கப்பட்ட வழக்கில் தி.மு.க. ஒன்றிய கவுன்சிலரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

Update: 2020-12-31 00:32 GMT
போலீஸ்காரரை தாக்கினர்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை போலீஸ் நிலையத்தில் 2-ம் நிலை போலீஸ்காரராக வேலூர் மாவட்டத்தை சேர்ந்த அரிபாபு (வயது 28) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர், கடந்த 28-ந் தேதி இரவு சின்னம்பேடு பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டார். அப்போது அங்கு சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை பாலத்தின் அருகே சிலர் மது குடித்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனை போலீஸ்காரர் அரிபாபு தட்டிக் கேட்டார்.

இதனையடுத்து ஏற்பட்ட வாக்குவாதத்தில் அங்கிருந்தவர்களில் 3 பேர், போலீஸ்காரர் அரிபாபுவை தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.

கவுன்சிலர் கைது
இந்த தாக்குதலில் தலை மற்றும் முகத்தில் படுகாயம் அடைந்த போலீஸ்காரர் அரிபாபு சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் தலைமையில் கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், போலீஸ்காரர் அரிபாபு தாக்கப்பட்ட வழக்கில் சோழவரம் ஒன்றிய தி.மு.க. கவுன்சிலரான சந்திரசேகர் (38) என்பவரை கவரைப்பேட்டை போலீசார் நேற்று கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்