ஊட்டியில் கடும் குளிருக்கு எலெக்ட்ரீசியன் பலி

ஊட்டியில் கடும் குளிருக்கு எலெக்ட்ரீசியன் பரிதாபமாக இறந்தார்.

Update: 2020-12-30 16:42 GMT
ஊட்டி,

மலைமாவட்டமான நீலகிரியில் காலநிலை மாற்றம் காரணமாக அவ்வப்போது உறைபனி தாக்கம் காணப்படுகிறது. தற்போது அங்கு கடும் குளிர் நிலவுவதுடன் இரவு நேரத்தில் உறைபனி தாக்கம் அதிகமாக இருக்கிறது.

இதன் காரணமாக ஊட்டி குதிரை பந்தய மைதானம், தாவரவியல் பூங்கா, அவலாஞ்சி, குந்தா உள்பட பல்வேறு பகுதிகளில் உள் ளபுல்வெளிகள் மீது உறைபனி படர்ந்து இருப்பதை காண முடிகிறது. இரவில் கடும் குளிர் இருப்பதால் இதில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் தீ மூட்டி குளிர் காய்ந்து வருகிறார்கள்.

ஊட்டி அருகே உள்ள காவிலோரை கிராமத்தை சேர்ந்தவர் மணி. இவருடைய மகன் சதீஷ்குமார் (வயது 42). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. எலெக்ட்ரீசியதான சதீஷ்குமாருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு குடித்துவிட்டு அவர் ஊட்டி சேரிங்கிராஸ் பஸ் நிறுத்தம் அருகே படுத்து உறங்கினார். நேற்று காலையில் அந்தப்பகுதியை சேர்ந்தவர்கள் பார்த்தபோது அங்கு சதீஷ்குமார் இறந்த நிலையில் கிடந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த ஊட்டி நகர மத்திய போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் அவர்கள் சதீஷ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில் சதீஷ்குமார், கடும் குளிருக்கு இறந்தது தெரியவந்தது. தொடர்ந்து இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஊட்டியில் நேற்று அதிகபட்ச வெப்பநிலையாக 16.6 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 10.5 டிகிரி செல்சியசும் பதிவாகியது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்