சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கமல்ஹாசன் இன்று தேர்தல் பிரசாரம்
சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கமல்ஹாசன் இன்று தேர்தல் பிரசாரம் செய்கிறார்.
திருப்பத்தூர்,
வருகிற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் மதுரையில் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று(புதன்கிழமை) காலை புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் தனது பிரசாரத்தை முடித்து விட்டு பகல் 11.30 மணிக்கு சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூருக்கு கமல்ஹாசன் வருகிறார். அங்கு அண்ணாசிலை பகுதியில் திறந்த காரில் நின்று தேர்தல் பிரசாரம் செய்கிறார்.
அதன் பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டு சிவகங்கை புதிய பஸ் நிலையம் பகுதியில் உள்ள மண்டபத்தில் மகளிரணி மற்றும் மாதர் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார். தொடர்ந்து தொண்டர்களின் கருத்துகளையும் அவர் கேட்க உள்ளார்.
அதன் பின்னர் மதியம் 2 மணிக்கு மேல் அங்கிருந்து புறப்பட்டு சென்று ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை மற்றும் பரமக்குடி ஆகிய ஊர்களில் தேர்தல் பிரசாரம் செய்கிறார். மாலை விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டைக்கு செல்கிறார்.
முன்னதாக சிவகங்கை மாவட்டத்திற்கு வரும் அவருக்கு கீழச்செவல்பட்டி சுங்கச்சாவடி பகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். இத்தகவலை சிவகங்கை மாவட்ட செயலாளர் (வடக்கு) கமல்ராஜா தெரிவித்தார்.