ராஜபாளையத்தில், ரெயில்வே மேம்பாலம், சாலைப்பணிகளை விரைந்து முடிக்கவேண்டும் - நடிகை கவுதமி வலியுறுத்தல்
ராஜபாளையம் ரெயில்வே மேம்பாலப்பணி மற்றும் சாலைப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று நடிகை கவுதமி வலியுறுத்தினார்.
ராஜபாளையம்,
ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பார்வையாளராக நடிகையும், கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினருமான கவுதமி நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று காலை டி.பி. மில்ஸ் சாலையில், அவர் வசிக்கும் இல்ல வளாகத்தில் பா.ஜ.க. கொடிைய ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார்.
பின்னர் அவர் அருகில் சத்திரப்பட்டி சாலையில் நடைபெற்று வரும் ெரயில்வே மேம்பால பணிகளை பார்வையிட்டார். மேலும் அப்பகுதி மக்களிடம் பேசிய கவுதமி, குறைகள் கேட்டறிந்தார்.
தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம் மற்றும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகள் சரிவர சீரமைக்கப்பட வில்லை என்று புகார் கூறிய பொதுமக்கள் இதனால் தாங்கள் சிரமப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
பினனர் நடிகை கவுதமி நிருபர்களிடம் கூறியதாவது:-
ராஜபாளையத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் அனைத்தும் நல்ல திட்டங்கள். ஆனால் மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் சரியான நேரத்தில் திட்டப்பணிகளை செய்து முடிப்பது அவசியம்.
ஆனால் இங்கு 3 வருடங்களாக மிகவும் ஆமை வேகத்தில் நடந்து வரும் திட்டப்பணிகளால் தற்போது சாலையில் நடக்க கூட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. பலர் காயம் அடைந்ததுடன் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. உயிரிழப்புகளுக்கு நியாயம் சொல்ல முடியாது. மேம்பாலத்திற்கு இரு புறமும் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இப்பகுதியில் உள்ள கடைகள் அனைத்தும் ஒரு வருடங்களுக்கும் மேலாக மூடப்பட்டுள்ளது.
திட்டப்பணிகளால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு தீர்வு கண்டறிய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே இத் திட்டப்பணிகளை விரைந்து முடிக்கும் வரை பா.ஜ.க. ஓயாது. பொதுமக்கள் தினந்தோறும் சந்தித்து வரும் இன்னல்களுக்கு விரைவில் முடிவு கட்ட வேண்டும்.
மக்களுக்கு சேவை செய்வதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மக்கள் பிரதிநிதிகள் தாமதத்திற்கான நியாயம் சொல்ல முடியாது. இடைப்பட்ட காலங்களில் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு என்ன பதில்?
இவ்வாறு நடிகை கவுதமி கூறினார்.
இதில் மாநில விவசாய அணி செயற்குழு உறுப்பினர் திருநாவுக்கரசு, மாநில பொறுப்பாளர் ஞானபண்டிதன், மாநில தொழில் பிரிவு செயலாளர் ராமகிருஷ்ணன், மேற்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் சந்திரன், நகர தலைவர் ராஜாராம் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து தளவாய்புரம் அருகே உள்ள செட்டியார்பட்டி பகுதிக்கு வந்த கவுதமிக்கு கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். ஒன்றிய செயலாளர் ரங்கசாமி வீட்டிற்கு சென்று கட்சியின் பூத் கமிட்டி செயல்பாடு பற்றி கேட்டறிந்தார். மக்கள் நீதி மய்யம் கட்சி பொறுப்பாளர் ஜெய்கணேஷ் கவுதமி முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். இதனையடுத்து நடிகை கவுதமி காரில் நின்றவாறும், நடந்து சென்றும் பொதுமக்களை சந்தித்து ஆதரவு கேட்டார். மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், ஒருங்கிணைப்பாளர் சுகந்தம் ராமகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர் பழனிச்சாமி உள்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.