மும்பை மாநகராட்சி தேர்தலில் தனித்து போட்டி: மாநில அரசு நீடிப்பது எங்கள் கையில் மட்டும் அல்ல; சிவசேனாவுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை

அரசு நீடிப்பது எங்கள் கையில் மட்டும் அல்ல என்று கூட்டணி கட்சிகளுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை விடுத்து உள்ளது. மேலும் மும்பை மாநகராட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவோம் என்றும் கூறியுள்ளது.

Update: 2020-12-30 01:20 GMT
காங்கிரஸ் கட்சி நிறுவன நாள் கொண்டாடப்பட்டதை தொடர்ந்து மும்பை ராஜூவ்காந்தி பவனில் கட்சியின்நிர்வாகிகள் கூட்டம்
காங்கிரஸ் அதிருப்தி
மராட்டியத்தில் எதிர்பாராமல் அமைந்த சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி அரசு 2-வது ஆண்டை அடி எடுத்து வைத்துள்ளது. இதில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் இடையே சுமூகமான போக்கு நீடித்து வரும் நிலையில் காங்கிரஸ் கட்சி அவ்வப்போது தனது விரக்தியை வெளிப்படுத்தி வருகிறது.

இதற்கு கூட்டணியில் சிவசேனாவும், தேசியவாத காங்கிரசும் பெரியண்ணன் தோரணையை காட்டுவதோடு, அந்த கட்சிகள் அவ்வப்போது காங்கிரஸ் தலைமையை சீண்டி வருவது தான் காரணம்.

கட்சி தலைமை மீது விமர்சனம்
ராகுல்காந்தி இன்னும் பக்குவம் இல்லாத தலைவராக தான் உள்ளார் என்று சமீபத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறினார். சோனியா காந்தி தலைமையில் இயங்கி வரும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் எதிர்காலம் குறித்தும், தலைமை குறித்தும் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவசேனாவின் சாம்னா பத்திரிகையில் விமர்சிக்கப்பட்டு இருந்தது. மேலும் சமீபத்தில் பிவண்டி மாநகராட்சியை சேர்ந்த 18 காங்கிரஸ் கவுன்சிலர்களை தேசியவாத காங்கிரஸ் தங்களது கட்சியில் இணைத்து கொண்டது.

இதுபோன்ற காரணங்களால் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் மீது காங்கிரஸ் கடும் ஆத்திரம் அடைந்து உள்ளது. மும்பையில் நேற்று முன்தினம் நடந்த காங்கிரஸ் நிறுவன நாள் விழாவில் அது பலமாக எதிரொலித்தது.

இதுகுறித்து மராட்டிய முன்னாள் முதல்-மந்திரி நசீம் கான் பேசியதாவது:-

எங்கள் கையில் மட்டும் அல்ல
மராட்டிய அளவில் மட்டும் தான் எங்களுடன் சிவசேனா கூட்டணி வைத்து உள்ளது. இதற்காக குறைந்தபட்ச செயல் திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது. அதன்படி அரசும், கட்சிகளும் நடைபெற வேண்டும். கூட்டணி கட்சிகள் வலுப்பட வேண்டுமே தவிர ஒரு கட்சியினர் மற்றொரு கட்சியை பலவீனப்படுத்தக்கூடாது.

எங்களது கட்சி தலைமையை விமர்சிக்க சாம்னாவுக்கு அதிகாரம் கொடுத்தது யார்?.. மாநில கூட்டணி அரசு தொடர்ந்து நீடிப்பது காங்கிரஸ் கையில் மட்டும் அல்ல. இதை மற்ற கூட்டணி கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும். காங்கிரஸ் தலைமையை பற்றி விமர்சிக்கும் பிரச்சினையை நாங்கள் 3 கட்சிகளின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் எழுப்புவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தனித்து போட்டி
மும்பை மாநகராட்சி உள்பட இனி வரும் தேர்தல்களில் 3 கட்சிகளும் கூட்டணி வைத்து போட்டியிடும் என்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே சமீபத்தில் கூறியிருந்தார்.

அதற்கு பதிலளிக்கும் வகையில் நசீம் கான் கூறுகையில், "2022 மும்பை மாநகராட்சி தேர்தலில் எங்களது கட்சி 227 தொகுதிகளிலும் போட்டியிடும். நாங்கள் எத்தனை இடங்களில் போட்டியிட வேண்டும் என்பதை சிவசேனா தீர்மானிக்க முடியாது. மாநகராட்சி தேர்தலில் நாங்கள் தனித்து போட்டியிட்டு, எங்கள் மேயரை பதவி ஏற்க செய்வோம்" என்றார்.

மேலும் செய்திகள்