கல்லூரி விடுதியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: என்ஜினீயரிங் மாணவர் கொலை வழக்கில் 5 பேர் கைது; தொடர்ந்து கூச்சலிட்டதால் கொன்றதாக வாக்குமூலம்

கல்லூரி விடுதியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின்போது என்ஜினீயரிங் மாணவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சக மாணவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2020-12-29 20:42 GMT
தகராறு
திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே ஜமீன் கொரட்டூரில் தனியார் கப்பல் பயிற்சி என்ஜினீயரிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரி விடுதியில் வெளி மாநிலங்களை சேர்ந்த 172 பேர் தங்கி பயின்று வருகின்றனர்.

இந்தநிலையில் கல்லூரி விடுதியில் பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த ஆதித்யா சர்மா (வயது 20) என்பவர் தங்கி 3-ம் ஆண்டு பயின்று வந்தார். கடந்த 25-ந்தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி விடுதியில் இருந்த சக மாணவர்களுடன் சேர்ந்து ஆதித்யா சர்மா கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடினார். விழாவில் 3-ம் ஆண்டு மற்றும் 4-ம் ஆண்டு பயிலும் மாணவர்கள் கலந்து கொண்டனர். அப்போது அவர்களுக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டு அது மோதலாக மாறியது. இதில் ஒருவரை ஒருவர் கைகளால் பலமாக தாக்கி கொண்டனர். தாக்குதல் முற்றவே மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் அங்கிருந்த பிளாஸ்டிக் நாற்காலியின் கால் பகுதியை உடைத்து ஆதித்யா சர்மாவின் கழுத்தில் பலமாக குத்தி உள்ளனர்.

கொலை
இதில் பலத்த காயத்துடன் சரிந்து கீழே விழுந்து உயிருக்கு போராடிய அவரை சக நண்பர்கள் மீட்டு உடனடியாக பூந்தமல்லியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து வெள்ளவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

கைது
போலீஸ் விசாரணையில் கல்லூரி மாணவர் ஆதித்யா சர்மாவை கொலை செய்தது கல்லூரி மாணவர்களான கேரளாவை சேர்ந்த ஜித்தன் ஜோஸ்வா (21) மற்றும் கெவின் ஜித்தன் மோகன் (21), ராகுல் என்கிற குட்டன் (21), பிபின் பாபு (20), அசத் அசாராப் (20) என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

இறந்த ஆதித்யா சர்மா கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின்போது தொடர்ந்து சத்தம் போட்டு கொண்டிருந்தார். அவரை சக மாணவர்கள் அமைதியாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியும் அவர் கூச்சலிட்டதால் தாக்கினோம்.

இவ்வாறு அந்த வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் செய்திகள்