திருவேற்காட்டில் பூனைக்கு சீர்வரிசைகளுடன் வளைகாப்பு நடத்திய குடும்பத்தினர்; சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வைரலானது

சென்னை திருவேற்காட்டை சேர்ந்தவர் ஜோதி குமார். இவரது வீட்டில் நாய் மற்றும் பூனைகளை செல்லமாக வளர்த்து வருகிறார். இந்தநிலையில் இவர் வளர்க்கும் பூனை ஒன்று குட்டி போடும் நிலையில் இருப்பதை உணர்ந்த அவர், அதற்கு வளைகாப்பு நடத்த வேண்டுமென முடிவு செய்தார்.

Update: 2020-12-29 20:15 GMT
இதையடுத்து கருவுற்றிருக்கும் பெண்களுக்கு வளைகாப்பு செய்வது போன்று பூனைக்கும் வளைகாப்பு நடத்த குடும்பத்தினர் முடிவு செய்தனர். அதன்படி செல்லமாக வளர்க்கும் பூனைக்கு பெண் போல அலங்காரம் செய்தும், அதற்கு முன்பு வரிசையாக தட்டுகள் வைத்தும் அலங்கரித்தனர். மேலும் 7 விதமான உணவுகள் மற்றும் பூனைக்கு பிரியமான நண்டு, மீன், இறால் உள்ளிட்ட அசைவ உணவுகளையும் வைத்து நாற்காலியில் அந்த பூனையை அமரவைத்தனர். பின்னர், பிரத்யேகமாக அமைக்கப்பட்ட வளையல்களை பூனைக்கு கால்களில் அணிந்து உறவினர்களை அழைத்து வளைகாப்பு நடத்தினார்கள். தனது பிள்ளைகள் போல பாவித்து வளர்க்கும் செல்லப்பிராணிகளுக்கு வளைகாப்பு நடத்தி வைத்தது மகிழ்ச்சி அளிப்பதாக அந்த குடும்பத்தினர் தெரிவித்தனர். மேலும் இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வைரலாக வருகிறது.

மேலும் செய்திகள்