சென்னையில் பரபரப்பு; கள்ளக்காதலனின் மனைவியை பழிவாங்க மோட்டார் சைக்கிளை எரித்த பெண்; கண்காணிப்பு கேமராவால் சிக்கினார்

கள்ளக்காதலனின் மனைவியை பழிக்குப்பழி வாங்கும் நோக்கில் குடியிருப்பில் நிறுத்தப்பட்ட அவரது மோட்டார் சைக்கிளை தீவைத்து எரித்த பெண் கைது செய்யப்பட்டார்.

Update: 2020-12-29 20:15 GMT
கைது செய்யப்பட்ட திவ்யா; 6 மோட்டார் சைக்கிள்களும் தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிவதை படத்தில் காணலாம்
மோட்டார் சைக்கிள்கள் தீப்பிடித்தது
சென்னை மதுரவாயல், சீமாத்தம்மன் நகர் பகுதியில் உள்ள 2 அடுக்குகள் கொண்ட குடியிருப்பில் வசிக்கும் 4 வாடகை வீடுகளை சேர்ந்தவர்கள் கீழே உள்ள இடத்தில் வாகனங்கள் நிறுத்தி வைத்திருந்தனர். இந்த நிலையில் நள்ளிரவு அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 6 மோட்டார் சைக்கிள்கள் திடீரென தீப்பிடித்து எரிவதாக வந்த தகவலையடுத்து, வீட்டில் இருந்தவர்கள் வெளியே ஓடி வந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர்.

ஆனால் தீயை அணைக்க முடியாததால் மதுரவாயல் தீயணைப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அணைத்தனர். இதில் 6 மோட்டார் சைக்கிள்கள் முற்றிலும் எரிந்து நாசமானது.

மேலும் இந்த தீ விபத்தில் வீட்டிற்கு வெளியே இருந்த ஏ.சி எந்திரம் கருகியது.

கள்ளக்காதல் விவகாரம்
இது குறித்து மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மோட்டார் சைக்கிள் தீ விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு செய்தனர். மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது பெண் ஒருவர் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்தது தெரியவந்தது.

மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த பெண், அங்கு வசித்து வரும் பழனிபாபு குமார் என்பவரின் கள்ளக்காதலி என தெரியவந்தது. இதையடுத்து பழனிபாபுகுமாரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, தனியார் வங்கியில் வேலை செய்தபோது அங்கு பணிபுரிந்த அய்யப்பன்தாங்கல் பகுதியை சேர்ந்த திவ்யா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது தெரியவந்தது.

இதற்கிடையே இந்த கள்ளத்தொடர்பால் திவ்யாவிற்கும், பழனிபாபுகுமாரின் மனைவி அமுதாவிற்கும் ஏற்கனவே தகராறு ஏற்பட்டு வந்ததும் தெரியவந்தது.

பெண் கைது
அதைத்தொடர்ந்து திவ்யா, அமுதாவை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கில் நேற்றுமுன்தினம் இரவு சம்பவ இடத்திற்கு வந்து அமுதாவின் மோட்டார் சைக்கிளை தீ வைத்து கொளுத்தி விட்டு அங்கிருந்து சென்று விட்டதும் உறுதியானது.

இதன் காரணமாக அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 6 மோட்டார் சைக்கிள்களுக்கும் தீ பரவி மோட்டார்சைக்கிள்கள் எரிந்து நாசமானதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து திவ்யா மீது மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். கள்ளக்காதலனின் மனைவியை பழிவாங்க நினைத்து அவரது மோட்டார் சைக்கிளை தீவைத்து நாசமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்