அ.தி.மு.க.வினர் பதவி வெறி பிடித்தவர்கள் அல்ல உளுந்தூர்பேட்டையில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சு
அ.தி.மு.க.வினர் பதவி வெறிபிடித்தவர்கள் அல்ல என்று உளுந்தூர்பேட்டையில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார்.
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டையில் அ.தி.மு.க. சட்டமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இதற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட ெசயலாளர் குமரகுரு எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் சி.வி. சண்முகம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழகத்தில் எடப்பாடி பழனி்சாமி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைய வேண்டும் என்கிற லட்சியத்தோடு அ.தி.மு.க.வினர் உழைத்து வருகின்றனர். இதற்கு நேர் மாறாக தி.மு.க.வினர் ஆன்லைனில் உறுப்பினர் சேர்க்கை நடத்தி வருகிறார்கள். அவ்வாறு உறுப்பினராக சேர்க்கப்பட்ட ஒருவருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். அந்த நபர் வேறு யாரும் இல்லை நமது தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்குத்தான் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். இது தான் தி.மு.க.வின் உறுப்பினர் சேர்க்கை லட்சணம்.
நமக்கு எதிரிகள் மட்டுமல்ல, துரோகிகளும் இருக்கின்றனர். எதிரிகள் யார் என்று தெரியும். ஆனால் துரோகிகள் யார் என்று தெரியாது. நாம் எதிரிகளோடு கவனமாக இருக்க வேண்டும். துரோகிகளிடம் மிக கவனமாக இருக்க வேண்டும்.
வருகிற சட்டமன்ற தேர்தல் நமக்கு வாழ்வா, சாவா தேர்தல். மு.க.ஸ்டாலின் போல ஆட்சி அதிகாரம் வேண்டும் என்று பதவி வெறி பிடித்தவர்கள் அல்ல அ.தி.மு.க.வினர். ஆனாலும் இந்த இயக்கத்திற்காக மீண்டும் நாம் ஆட்சிக்கு வரவேண்டும். எந்த அளவிற்கு ஆட்சி முக்கியமோ அதே அளவிற்கு இயக்கமும் முக்கியம். ஜெயலலிதா, கருணாநிதி போன்றவர்கள் இல்லாத போது ரஜினி, கமல் போன்ற நடிகர்கள் அரசியலுக்கு வர துடிக்கின்றனர். இதில் யாராவது ஒருவர் தங்கள் கொள்கை இதுதான், இதற்காகத்தான் நாங்கள் தமிழ்நாட்டு மக்களுக்காக கட்சி தொடங்கினோம் என சொன்னார்களா? யாரும் சொல்ல மாட்டார்கள். கமல், ரஜினி போன்றவர்கள் நாட்டிற்கு சேவை செய்ய வரவில்லை. கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது தி.மு.க. நகை கடன்களை தள்ளுபடி செய்வோம் என வாக்குறுதி அளித்தது. ஆனால் இதுவரை கனிமொழி உட்பட ஒரு தி.மு.க. எம்.பி.யும் இது பற்றி நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கவில்லை.
தான் என்ன ? பேசுகிறோம் என தனக்கே தெரியாத மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்து என்ன செய்யப்போகிறார்?. எனவே நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து கருத்து வேறுபாடுகளை மறந்து சுறுசுறுப்பாக பணியாற்றி வரும் தேர்தலில் தமிழ்நாட்டு முதல்-அமைச்சராக மீண்டும் எடப்பாடி பழனி்சாமியை பதவி ஏற்க செய்வோம். இவ்வாறு அவர் பேசினார். இதில் ஒன்றிய செயலாளர்கள் மணிராஜ், செண்பக வேல், ஏகாம்பரம், பழனிவேல், ராமலிங்கம், சந்திரன், நகர செயலாளர் துரை மற்றும் முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் சாய்ராம், பேரவை நிர்வாகி நமச்சிவாயம் குமரகுரு, மாவட்ட பேரவை செயலாளர் ஞானவேல், நகர இளைஞரணி செயலாளர் ராமலிங்கம், முன்னாள் மாவட்ட அவைத்தலைவர் ராமசாமி, கூட்டுறவு சங்க தலைவர்கள் ஆனந்தன், சுப்புராயன், அப்போலின், சுப்பிரமணியன், பழனி, எலவனாசூர்கோட்டை மதியழகன், ஜீவானந்தம், முன்னாள் கவுன்சிலர் சியாமளா ராஜா, நிர்வாகிகள் சேட்டு, ஒன்றிய துணை செயலாளர் ராஜாராம், தகவல் தொழில்நுட்ப பிரிவு நகர செயலாளர் சாய்அருண், வக்கீல் திலீப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.