வாணாபுரம் அருகே, மரத்தின் மீது கார் மோதல்; வாலிபர் சாவு - கணவன்-மனைவி உள்பட 3 பேர் படுகாயம்

வாணாபுரம் அருகே மரத்தின் மீது கார் மோதியதில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். கணவன் - மனைவி உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2020-12-29 10:22 GMT
வாணாபுரம்,

கோவை பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன் (வயது 56). இவர், அங்குள்ள சர்க்கரை ஆலையில் வேலை செய்து வருகிறார். இவர், தனது மனைவி சுப்புலட்சுமி (50), மகன்கள் கார்த்திக் (23), அஸ்வின்நடராஜ் (18) ஆகியோருடன் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய காரில் வந்தார். கார்த்திக் காரை ஓட்டினார்.

வாணாபுரத்தை அடுத்த மேல்புத்தியந்தல் அருகே வந்தபோது, சாலையின் குறுக்கே ஆடுகள் சென்றதால் ஆடுகள் மீது மோதாமல் இருக்க கார்த்திக் ‘பிரேக்’ போட்டதாக தெரிகிறது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது மோதியது.

இதில் படுகாயமடைந்த சுப்புலட்சுமி, கார்த்திக், அஸ்வின் நடராஜ், பழனியப்பன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். உடனே அந்த பகுதியில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அஸ்வின் நடராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தச்சம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்