புதுவையில் பாதிப்பு 38 ஆயிரத்தை தாண்டியது: இங்கிலாந்து பயணியுடன் வந்த பெண்ணுக்கு கொரோனா இல்லை

இங்கிலாந்து பயணியுடன் புதுவை வந்த பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.

Update: 2020-12-29 02:08 GMT
புதுச்சேரி,

இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் உருவாகி இருப்பது உலக நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தநிலையில் இங்கிலாந்தில் இருந்து வந்த பயணி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அவரது பக்கத்து இருக்கையில் அமர்ந்து புதுவை முதலியார்பேட்டையை சேர்ந்த பெண் ஒருவரும் வந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து அவர் யார்? என்பது கண்டறியப்பட்டு புதுவை கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். அவர் டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டார். கொரோனா பரிசோதனை செய்ததில் அவருக்கு தொற்று பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தது.

இதன் காரணமாக அவர் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இருந்தபோதிலும் தொடர்ந்து 14 நாட்கள் தனிமையில் இருக்குமாறு அவர் அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

38 ஆயிரம் பேருக்கு தொற்று

புதுவை மாநிலத்தில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 1,828 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 33 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. 35 பேர் குணமடைந்துள்ளனர்.

இதுவரை ஒட்டுமொத்தமாக 4 லட்சத்து 76 ஆயிரத்து 570 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 38 ஆயிரத்து 28 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. அதில் 147 பேர் ஆஸ்பத்திரிகளிலும், 210 பேர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

37 ஆயிரத்து 40 பேர் குணமடைந்துள்ளனர். 631 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் செய்திகள்