நெடுங்காடு, திருநள்ளாறு தொகுதியில் தரமற்ற பருப்பு, கொண்டைக்கடலை வினியோகம் பொதுமக்கள் அதிர்ச்சி

நெடுங்காடு, திருநள்ளாறு தொகுதியில் வினியோகித்த பருப்பு, கொண்டைக்கடலையில் பூச்சிகள் இருந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

Update: 2020-12-29 02:06 GMT
காரைக்கால்,

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பிரதம மந்திரி கரிப் கல்யாண் அன்னயோஜனா மற்றும் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் சிவப்பு நிற ரேஷன் அட்டைதாரர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி ஜூலை முதல் நவம்பர் மாதம் வரையிலான ஒதுக்கீடு செய்யப்பட்ட 1 கிலோ துவரம் பருப்பு, 4 கிலோ கொண்டைக்கடலை நெடுங்காடு மற்றும் திருநள்ளாறு தொகுதியில் வினியோகம் செய்யப்பட்டது.

பொதுமக்கள் அதிர்ச்சி

அதை பொதுமக்கள் ஆர்வத்துடன் சென்று வாங்கினர். அதில் பார்த்த போது பூச்சிகள் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அதை மாற்றித் தருமாறு கேட்டதற்கு வேறு இல்லை என்று தெரிவிக்கப்பட்டதையடுத்து வேறு வழியின்றி பொதுமக்கள் அதை வாங்கிச்சென்றனர். ஒருசிலர் அதை வாங்காமல் திரும்பிச் சென்றனர்.

இதுபற்றி தகவல் அறிந்த நெடுங்காடு தொகுதி எம்.எல்.ஏ. சந்திரபிரியங்கா உணவு பொருள் வினியோகம் செய்த இடத்திற்கு சென்று, பருப்பு மற்றும் கொண்டைக் கடலையை ஆய்வு செய்தார்.

அதில் பூச்சிகள் இருப்பதை உறுதிசெய்ததுடன் உடனடியாக குடிமைப்பொருள் துறை துணை இயக்குனரிடம் செல்போனில் பேசி புகார் தெரிவித்தார். இதையடுத்து பருப்பு, கொண்டைக்கடலை வினியோகம் நிறுத்தப்பட்டது. தி.மு.க. மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் விக்னேஷ்வரனும் தரமான பொருளை வழங்குமாறு அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

சாலைமறியல்

இந்த நிலையில் திருநள்ளாறு தேனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தரமற்ற பருப்பு, கொண்டைக்கடலை வினியோகிக்கப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்து திருநள்ளாறு போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்துபோக செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்