மத்திய விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி நெருக்கடி; 22 எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்ய வைத்து அரசை கவிழ்க்க பா.ஜனதா முயற்சி; சிவசேனா பரபரப்பு குற்றச்சாட்டு

காங்கிரஸ், தேசியவாத காங்கிரசை சேர்ந்த 22 எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்ய வைத்து மராட்டிய அரசை கவிழ்க்க பா.ஜனதா முயற்சி செய்வதாக சிவசேனா பரபரப்பு குற்றம்சாட்டி உள்ளது.

Update: 2020-12-29 01:25 GMT
சேனா பவனில் சஞ்சய் ராவத் எம்.பி. பேட்டி அளித்த காட்சி
288 தொகுதிகளை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு கடந்த ஆண்டு (2019) நடந்த தேர்தலில் பா.ஜனதா, சிவசேனா கட்சிகள் கூட்டணி வைத்து போட்டியிட்டன. இதேபோல காங்கிரஸ் மற்றும் சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிகளும் கூட்டணி வைத்து போட்டியிட்டன.

சிவசேனா ஆட்சி
இந்த தேர்தலில் பா.ஜனதா 105 இடங்களை பெற்று தனிப்பெரும் கட்சியாகவும், அதன் கூட்டணி கட்சியான சிவசேனா 56 தொகுதிகளையும் பெற்றது. தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களிலும், காங்கிரஸ் 44 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.

2½ ஆண்டு காலம் முதல்-மந்திரி பதவியை கேட்டு சிவசேனா வலியுறுத்தியபோது, அதற்கு பா.ஜனதா மறுப்பு தெரிவித்து விட்டது. இதனால் யாரும் எதிர்பாராத விதமாக சிவசேனா தனது இந்துத்வா கொள்கையில் முரண்பட்ட காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி அரசை அமைத்தது. இந்த கூட்டணி அரசு 2-வது ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளது.

பரபரப்பு குற்றச்சாட்டு
இந்த நிலையில் சிவசேனா கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளரும், மாநிலங்களை தொகுதி எம்.பி.யுமான சஞ்சய் ராவத்தின் மனைவி வர்ஷா ராவத்துக்கு அமலாக்கத்துறை 3-வது முறையாக சம்மன் அனுப்பி உள்ளது. பி.எம்.சி. வங்கி முறைகேட்டில் நடந்த சட்டவிரோத பணபரிமாற்றம் தொடர்பான விசாரணைக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) ஆஜராக உத்தரவிட்டு உள்ளது.

இதையடுத்து சஞ்சய் ராவத் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது மராட்டிய அரசை கவிழ்க்க பா.ஜனதா முயற்சிப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

22 எம்.எல்.ஏ.க்களை...
கடந்த ஓராண்டாக பா.ஜனதாவை சேர்ந்த சில தலைவர்கள் என்னை தொடர்புகொண்டு, உங்கள் அரசை கவிழ்க்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டோம் என கூறுகிறார்கள். அவர்களுக்கு நாங்கள் ஆதரவு அளிக்காததால் இவ்வாறு அழுத்தம் கொடுத்து மிரட்டுகிறார்கள்.

காங்கிரஸ், தேசியவாத காங்கிரசை சேர்ந்த 22 எம்.எல்.ஏ.க்களின் பெயர் பட்டியலை அவர்கள் வைத்துள்ளனர். அவர்களை அமலாக்கத்துறை, வருமானவரி, சி.பி.ஐ. போன்ற மத்திய விசாரணை அமைப்புகள் மூலம் நெருக்கடி கொடுத்து பதவி விலகச்செய்ய பா.ஜனதா அழுத்தம் கொடுக்கிறது. இதன் மூலம் எங்கள் அரசை கவிழ்க்க முயற்சி செய்கிறார்கள்.

ஆயுதமாக பயன்படுத்துகிறார்கள்
அரசியல் ரீதியாக வெல்ல முடியாததால், பா.ஜனதாவின் எதிரிகளின் குடும்ப உறுப்பினர்களை குறிவைக்கிறார்கள். மத்திய விசாரணை அமைப்புகளை அதற்கு ஆயுதங்களாக மத்திய அரசு பயன்படுத்துகிறது.

என் மனைவிக்கு சம்மன் அனுப்பிய விவகாரம் தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரிடம் பேசுவேன். நான் பால் தாக்கரேயிடம் இருந்து வளர்ந்தவன் என்பதால், நிச்சயம் பா.ஜனதா தலைவர்களின் உண்மையை வெளிப்படுத்துவேன்.

என்னிடம் 120 பா.ஜனதா தலைவர்களின் பட்டியல் இருக்கிறது. அது அமலாக்கப்பிரிவினர் விசாரணைக்கு தகுதியானது. என்னுடைய மனைவி ஒரு பள்ளி ஆசிரியை. பா.ஜனதா தலைவர்கள் போல் எங்களுக்கு வருமானம் இல்லை. எங்கள் வருமானம், ரூ.1,600 கோடியாக எல்லாம் உயரவில்லை.

நாங்கள் சாதாரண நடுத்தர குடும்பத்தினர். என் மனைவி வங்கியில் இருந்து ரூ.50 லட்சம் கடனை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் பெற்றார். அதற்கான சரியான வட்டி, அசல் தொகை செலுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பான அனைத்து விவரங்களும் அமலாக்கப் பிரிவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

பதிலடி கொடுப்போம்
மாநிலத்தில் ஆளும் அரசை கவிழ்க்க நவம்பர் மாதம் வரை பா.ஜனதா காலக்கெடு விதித்திருந்தது. ஆனால், அரசை கவிழ்க்க முடியவில்லை. எனவே, ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் குடும்பத்தினரை பா.ஜனதா குறிவைக்கிறது.

அரசியல் எதிரிகளை எதிர்த்து நேருக்கு நேர் போராட முடியாதபோது, அரசியல் காழ்ப்புணர்ச்சி விளையாடுகிறது. இதற்கு சிவசேனா கட்சியும் தக்க பதிலடி கொடுக்கும்.

ஆளும் மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசுக்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லை. சம்மன் அனுப்பி எங்களை கைது செய்தாலும், அரசு உறுதித்தன்மையுடன் இருக்கும். பா.ஜனதா செய்யும் அதே தந்திரங்களுடன் நாமும் பதிலடி கொடுப்போம் என உத்தவ் தாக்கரே என்னிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அதற்காக எங்கள் அரசியல் எதிரிகளின் குடும்ப உறுப்பினர்களை பயன்படுத்த மாட்டோம்.

இ்வ்வாறு சஞ்சய் ராவத் கூறினார்.

மேலும் செய்திகள்