பசுவதை தடை சட்டத்தை காங்கிரசார் எதிர்ப்பது ஏன்? கர்நாடக சட்டத்துறை மந்திரி மாதுசாமி கேள்வி
பசுவதை தடை சட்டத்தை காங்கிரசார் எதிர்ப்பது ஏன்? என்று சட்டத்துறை மந்திரி மாதுசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
கர்நாடக மந்திரிசபை கூட்டத்திற்கு பிறகு சட்டத்துறை மந்திரி மாதுசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
பசுவதை தடை சட்டம்
மந்திரிசபை கூட்டத்தில் பசுவதை தடைக்கு அவசர சட்டம் பிறப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதை கவர்னரின் ஒப்புதல் பெற அனுப்பி வைத்துள்ளோம். இதற்கு காங்கிரசார் எதிர்ப்பு தெரிவிப்பது ஆச்சரியமாக உள்ளது. பசுவதை தடை சட்டம் ஏற்கனவே அமலில் உள்ளது. அதில் நாங்கள் சில திருத்தங்களை செய்துள்ளோம். ஆண் கன்றுக் குட்டிகளை வளர்க்க முடியாதவர்கள் கோசாலைகளில் விட்டுவிடலாம். அத்தகைய மாடுகளை அரசே வளர்க்கும்.
பசுக்களை கொன்றால் அதற்கான அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. பழைய சட்டத்தில் 12 வயதை தாண்டிய பசு மற்றும் 13 வயதுக்கு மேற்பட்ட எருமை மாடுகளை கொல்ல அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. புதிய சட்டத்தில் அந்த அம்சங்களை ரத்து செய்துள்ளோம். இந்த புதிய சட்டத்திற்கு காங்கிரசார் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்பது தெரியவில்லை.
எதிர்ப்பது சரியல்ல
நீண்ட காலமாக அரசியலில் இருக்கும் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, இதுபற்றி விவாதிக்க வராமல், இந்த சட்டத்தை எதிர்ப்பது சரியல்ல. பசுவதை தடை அவசர சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கிய முதல்-மந்திரி மற்றும் மந்திரிகளுக்கு நன்றி தெரிவிக்கிறேன். பசுவதை தடை சட்ட மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. மேல்-சபையில் இன்னும் அந்த மசோதா நிறைவேற்றப்படவில்லை. அதனால் நாங்கள் ஆழ்ந்து ஆலோசனை நடத்தி இந்த அவசர சட்டத்தை கொண்டு வந்துள்ளோம்.
இவ்வாறு மாதுசாமி கூறினார்.
கால்நடைத்துறை மந்திரி பிரபுசவான் கூறுகையில், "இந்த அவசர சட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவிக்கிறார்கள். நாங்கள் இந்த சட்டத்தை சரியான முறையில் தீவிரமாக அமல்படுத்துவோம். கர்நாடக வரலாற்றில் நாங்கள் மிக முக்கியமான ஒரு சட்டத்தை கொண்டு வந்துள்ளோம். இதில் எங்களுக்கு முழு திருப்தி கிடைத்துள்ளளது" என்றார்.