காவேரிப்பட்டணம் அருகே லாரி மோதி 2 ராணுவ வீரர்கள் பலி

காவேரிப்பட்டணம் அருகே லாரி மோதி 2 ராணுவ வீரர்கள் பலியானார்கள்.

Update: 2020-12-28 17:13 GMT
காவேரிப்பட்டணம், 

கிருஷ்ணகிரி அருகே உள்ள பாறை கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவருடைய மகன் பிரசாந்த் (வயது (வயது 23). இவர் ஆந்திர மாநிலம் செகந்திராபாத்தில் ராணுவ வீரராக பணிபுரிந்து வந்தார். இவர் விடுமுறையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

இதே ஊரைச் சேர்ந்தவர் சக்கரை. இவருடைய மகன் கோவிந்தராஜ் (21). இவர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ராணுவ பயிற்சி முடித்து விட்டு நேற்று முன்தினம் தனது சொந்த ஊருக்கு விடுமுறையில் வந்தார். நண்பர்களான பிரசாந்த்தும், கோவிந்தராஜூம் நேற்று காலை கிருஷ்ணகிரி கே.ஆர்.பி.அணை செல்லும் சாலையில் காவேரிப்பட்டணம் அருகே சின்னமுத்தூர் இணைப்பு சாலை பகுதியில் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது எதிரே வந்த டிப்பர் லாரி, மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார்சைக்கிளில் சென்ற 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் கோவிந்தராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்த பிரசாந்த் காவேரிப்பட்டணம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் காவேரிப்பட்டணம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் கோவிந்தராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஒரே கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் 2 பேர் விபத்தில் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்