தமிழகம் தொடர்ந்து 8 ஆண்டுகளாக உணவு தானிய உற்பத்தியில் சிறப்பிடம் பெற்று வருகிறது பயிற்சி முகாமில் அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்

தமிழகம் தொடர்ந்து 8 ஆண்டுகளாக உணவு தானிய உற்பத்தியில் சிறப்பிடம் பெற்று வருகிறது என்று விவசாயிகளுக்கான பயிற்சி முகாமில் அமைச்சர் கே.பி. அன்பழகன் கூறினார்.

Update: 2020-12-28 17:00 GMT
தர்மபுரி, 

பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கரும்பு விவசாயிகளுக்கான நவீன சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து மாநில அளவிலான 2 நாட்கள் பயிற்சி முகாம் தொடக்க விழா நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் கார்த்திகா தலைமை தாங்கினார். சம்பத்குமார் எம்.எல்.ஏ., மாவட்ட மத்திய கூட்டுறவு தலைவர் எஸ்.ஆர். வெற்றிவேல், கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர் சங்கர், கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

உயர்கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பயிற்சி முகாமை தொடங்கி வைத்து 24 விவசாயிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் உதவி கலெக்டர் தணிகாசலம், மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் ரங்கநாதன், பாலக்கோடு ஒன்றியக்குழு தலைவர் பாஞ்சாலை கோபால், பேரூராட்சி செயல் அலுவலர் டார்த்தி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர் செந்தில்குமார், தமிழ்நாடு விவசாய சங்க தலைவர் சின்னசாமி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், வேளாண்மை, தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். பயிற்சி முகாமில் அமைச்சர் ேபசியதாவது.

விவசாயிகளின் கருத்துக்கள் தமிழக முதல்-அமைச்சர் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். எண்ணேகொல்புதூர்-தும்பலஅள்ளி நீர்பாசன திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த தமிழக அரசு ரூ.72 கோடி ஒதுக்கீடு செய்து நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. அணையாளம் அணைக்கட்டில் இருந்து தூள்செட்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டுவரும் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு ரூ.100 கோடியை பொதுப்பணித்துறைக்கு ஒதுக்க உள்ளது. ஜெர்தலாவ்-புலிக்கரை நீர்பாசன திட்டம் தற்போது ஒப்பந்த புள்ளி கோரும் நிலையில் உள்ளது.

தமிழகத்தில் நீர் மேலாண்மை திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு அந்த திட்டங்கள் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருகிறது. 8 ஆண்டுகளாக உணவு தானிய உற்பத்தியில் தமிழகம் தொடர்ந்து சிறப்பிடம் பெற்று வருகிறது. நடப்பாண்டில் உணவு தானிய உற்பத்தி 125 லட்சம் மெட்ரிக் டன் என்ற சாதனையை அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் பேசினார்.

மேலும் செய்திகள்