திருப்பத்தூர் அருகே கார் மோதி அரசு பஸ் டிரைவர் சாவு
திருப்பத்தூர் அருகே கார் மோதி அரசு பஸ் டிரைவர் உயிரிழந்தார்.
திருப்பத்தூர்,
கந்திலி ஒன்றியம் எலவம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 41), அரசு பஸ் டிரைவர். இவர், சென்னையில் வேலை பார்த்து வந்தார். அதே ஊரைச் சேர்ந்தவர் திருப்பதி (40. இவர், தனியார் கல்லூரி பஸ் டிரைவராக உள்ளார். நண்பர்களான இருவரும் ஒரு மோட்டார்சைக்கிளில் வேலை காரணமாக புதுப்பேட்டை கிராமத்துக்கு சென்று விட்டு திருப்பத்தூரை நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
திருப்பத்தூரை அடுத்த கோனாப்பட்டு அருகே வந்தபோது அந்த வழியாக புதுச்சேரி பகுதியில் இருந்து பெங்களூரூவை நோக்கி வந்த ஒரு கார் திடீரென அவர்கள் வந்த மோட்டார்சைக்கிள் மீது மோதியது. அதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். அதில் மோட்டார்சைக்கிளை ஓட்டி வந்த திருப்பதிக்கு கால் முறிந்தது. பின்னால் அமர்ந்திருந்த ரமேசுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர்களை, அங்கிருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரமேஷ் உயிரிழந்தார். திருப்பதிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து திருப்பத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.