காரில் ரகசிய அறைகள் அமைத்து ரூ.90 லட்சம் ஹவாலா பணம் கடத்தல் - ரியல் எஸ்டேட் அதிபர் உள்பட 3 பேரிடம் விசாரணை

ரூ.27 லட்சம் கொள்ளை வழக்கில் திடீர் திருப்பமாக ரியல் எஸ்டேட் அதிபர் காரில் கடத்தி வந்த ரூ.90 லட்சம் ஹவாலா பணம் சிக்கியது தொடர்பாக 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2020-12-28 13:49 GMT
கோவை,

கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்தவர் அப்துல்சலாம் (வயது50). ரியல் எஸ்டேட் அதிபர். இவர் தனது காரில் பெங்களூருவில் இருந்து கோவை வழியாக கேரளாவுக்கு கடந்த 25-ந் தேதி சென்றார். காரை டிரைவர் சம்சுதீன் (42) ஓட்டினார்.

அவர்களின் கார் கோவை நவக்கரை அருகே வந்த போது 2 கார்களில் வந்த மர்ம கும்பல் அப்துல் சலாமை கத்தி முனையில் மிரட்டி தாக்கி விட்டு கார் மற்றும் ரூ.27 லட்சம் பணத்தை கொள்ளையடித்தாக புகார் கூறப்பட்டது. அதன் பேரில் கே.ஜி. சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 3 தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் கொள்ளையர்கள் கடத்திச் சென்ற அப்துல் சலாமின் கார் கோவை சிறுவாணி சாலை மாதம்பட்டி அருகே மீட்டு கே.ஜி.சாவடி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. பேரூர் பச்சாபாளையம் அருகே அப்துல் சலாம், சம்சுதீன் ஆகியோரின் செல்போன்களும் கண்டெடுக்கப்பட்டது.

இதையடுத்து மீட்கப்பட்ட அப்துல்சலாமின் காரை தனிப்படை போலீசார் அங்குலம் அங்குலமாக சோதனையிட்டனர். அப்போது, காரின் கதவுகள் உடைக்கப்பட்டு, பின்பகுதியின் அடியில் 4 ரகசிய அறைகள் அமைக்கப்பட்டு இருந்தன. அதை திறந்து பார்த்த போது கட்டுக்கட்டாக பணம் இருந்தது.

உடனே அவற்றை போலீசார் பறிமுதல் செய்த போது ரூ.90 லட்சம் பணம் இருந்தது. அந்த பணத்தை பெங்களூருவில் இருந்து காரில் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அப்துல் சலாம் மற்றும் சம்சுதீன் ஆகியோரிடம் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.காரில் ஹவாலா பணம் கடத்தி வருவதை நோட்டமிட்டு கொள்ளைய டிக்கும் கும்பல் தான் அப்துல்சலாமை வழிமறித்து தாக்கி ரூ.27 லட்சத் தை மட்டும் கொள்ளையடித்து உள்ளது. ஆனால் காருக்குள் ரகசிய அறைகளில் பணம் இருந்தது தெரியாததால் கொள்ளை கும்பல் காரை அனாதையாக விட்டு சென்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்கிடையே போலீசார் அப்துல்சலாமின் செல்போனை ஆய்வு செய்த போது, அவருடன் கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த முகமது அலி என்பவர் அடிக்கடி பேசியது தெரியவந்தது. எனவே அவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தமிழக-கேரள எல்லையில் ஹவாலா பணத்தை கொண்டு வருபவர்களை வழிமறித்து கொள்ளையடிக்கும் சம்பவங்கள் ஏற்கனவே பல முறை நடைபெற்றுள்ளது. இந்த வழக்கில் அந்த கும்பலுக்கு தொடர்பு இருக்கிறதா? என்று தமிழக போலீசார் கேரளாவில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

காரில் ஹவாலா பணம் கடத்தப்பட்டதால் அமலாக்கத் துறை அதிகாரிகளும் விசாரணை முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. ரூ.27 லட்சம் கொள்ளை வழக்கில் திடீர் திருப்பமாக ஹவாலா பணம் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்