சட்டசபை தேர்தலுக்கான ஆயத்த பணி: வாக்கு எண்ணும் மையங்களில் கலெக்டர் கோவிந்தராவ் ஆய்வு

தஞ்சை மாவட்டத்தில் சட்டசபை தேர்தலுக்கான ஆயத்த பணியாக 3 வாக்கு எண்ணும் மையங்களில் கலெக்டர் கோவிந்தராவ் ஆய்வு செய்தார்.

Update: 2020-12-28 05:10 GMT
தஞ்சாவூர்,

தமிழகத்தில் அடுத்தஆண்டு(2021) சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை நடத்துவதற்கான ஆயத்த பணியில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. அரசியல் கட்சியினரும் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவிட்டனர். தஞ்சை மாவட்டத்திலும் தேர்தல் நடத்துவதற்கான ஆயத்த பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது.

தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, திருவையாறு, பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர் ஆகிய 8 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இவற்றில் தஞ்சை, ஒரத்தநாடு, திருவையாறு ஆகிய தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையம் தஞ்சை குந்தவைநாச்சியார் அரசினர் மகளிர் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது.

கலெக்டர் ஆய்வு

அதேபோல் பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையம் பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர் ஆகிய தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையம் கும்பகோணம் அரசினர் கல்லூரியிலும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த 3 வாக்கு எண்ணும் மையங்களில் கலெக்டர் கோவிந்தராவ் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.

அப்போது அவர், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை எந்த அறையில் வைப்பது, வாக்கு எண்ணிக்கையை எங்கே நடத்துவது, ஊடக அறை எங்கே அமைப்பது என்பது குறித்து வரைபடத்துடன் ஆய்வு மேற்கொண்டார். மேலும் அவர், தடுப்பு கட்டைகள் அமைப்பது, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது குறித்தும் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசித்தார்.

ஆய்வின்போது போலீஸ் சூப்பிரண்டு தே‌‌ஷ்முக் சேகர் சஞ்சய், வருவாய் கோட்டாட்சியர்கள் வேலுமணி, விஜயன், துணை போலீஸ் சூப்பிரண்டு பாரதிராஜன், தஞ்சை தாசில்தார் வெங்கடேஸ்வரன் மற்றும் பிற தாசில்தார்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்