மத்திய- மராட்டிய அரசுகள் மோதல் போக்கால் தடுமாறும் பாதாள மெட்ரோ ரெயில் திட்டம்
மத்திய, மராட்டிய அரசுகள் மோதல் போக்கால் பாதாள மெட்ரோ ரெயில் திட்டம் தடுமாற்றத்தில் உள்ளது. மோதலை கைவிட்டு விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
சுரங்க மெட்ரோ ரெயில் திட்டம்
மும்பையில் கொலபா- பாந்திரா- சீப்ஸ் இடையே 33.5 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரெயில் திட்டப்பணிகள் நடந்து வருகிறது. முழுக்க முழுக்க பூமிக்கு அடியில் சுரங்கம் அமைத்து இந்த திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. வழித்தடம் பாதாளத்தில் அமைவதால் இந்த 3-வது மெட்ரோ ரெயில் திட்டப்பணிக்கு அதிகளவில் நிலம் கையகப்படுத்தப்படவில்லை என மெட்ரோ நிறுவனம் தெரிவித்து உள்ளது.
மெட்ரோ ரெயில் 3-வது திட்டப்பணிகள் கடந்த 2014-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. திட்டத்தை 2021-ம் ஆண்டு டிசம்பருக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் திட்டமிடப்பட்ட காலத்திற்கு முன்னதாகவே சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டு வருகின்றன. தாராவி ரெயில் நிலையம் உள்பட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் முடிந்து உள்ளன. இதற்காக வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட ராட்சத துளையிடும் எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
நதிக்கு அடியில் பாதை
இதேபோல பி.கே.சி. - தாராவி இடையே மித்தி நதியின் அடியிலும் 2 மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது. இதில் ஒரு பாதை அமைக்கும் பணி கடந்த மார்ச் மாதம் முடிந்தது. நாட்டிலேயே மெட்ரோ ரெயிலுக்காக நதிக்கு அடியில் அமைக்கப்படும் 2-வது சுரங்கப்பாதை இதுவாகும். ஏற்கனவே மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் ஹீக்லி நதி அடியில் மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.
இதேபோல இந்த மெட்ரோ ரெயில் திட்டம் தாராவி மக்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மெட்ரோ ரெயில் திட்டம் முடிந்தவுடன் நீண்ட காலமாக கிடப்பில் உள்ள தாராவி சீரமைப்பு திட்டம் நிறைவேற்றப்படும் என தாராவி மக்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
ஆரேகாலனி பிரச்சினை
இந்தநிலையில் ஆரம்பம் முதலே மெட்ரோ திட்டத்துக்கு பணிமனை அமைப்பது பிரச்சினையாக இருந்து உள்ளது. முந்தைய தேவேந்திர பட்னாவிஸ் அரசு ஆரேகாலனியில் பணிமனையை அமைக்க முடிவு செய்தது. எனினும் ஆரேகாலனியில் பணிமனை அமைக்கப்பட்டால் அதற்காக ஆயிரக்கணக்கில் மரங்கள் வெட்டப்படும் என அந்த திட்டத்துக்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவர்கள் மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு வரை சென்று மாநில அரசு ஆரேகாலனியில் பணிமனை அமைக்க அனுமதி பெற்றது. இதன்பிறகு சமூக ஆர்வலர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி ஆரேகாலனியில் பணிமனை அமைக்கும் பணிகள் தொடங்கியது. ரூ100 கோடி அளவில் கட்டுமான பணிகளும் தொடங்கின. ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டன.
மத்திய, மாநில அரசு மோதல்
இந்தநிலையில் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாவிகாஸ் அகாடி அரசு கடந்த 2019-ம் ஆண்டு நவம்பரில் பதவி ஏற்றது. பதவி ஏற்றவுடன் உத்தவ் தாக்கரே ஆரேகாலனி மெட்ரோ பணி மனை திட்டத்துக்கு தடைவிதித்தார். சமீபத்தில் மெட்ரோ பணிமனை ஆரேகாலனியில் இருந்து காஞ்சூர்மார்க்கிற்கு மாற்றப்பட்டது. ஆரேகாலனியில் சுற்றுச்சூழலை பாதுகாக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மாநில அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால் மாநில அரசின் இந்த முடிவுக்கு பா.ஜனதா கடும் எதிர்ப்பு தொிவித்தது. அரசின் இந்த முடிவால் மெட்ரோ ரெயில் திட்டப்பணிகள் முடிய காலதாமதம் ஆவதுடன், ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கூடுதல் செலவாகும் எனவும் குற்றம்சாட்டியது.
இந்தநிலையில் காஞ்சூர்மார்க்கில் பணிமனை கட்ட மாநில அரசு ஒதுக்கிய 102 ஏக்கர் நிலம் தங்களுக்கு சொந்தமான உப்பு நிலம் என்று மத்திய அரசு உாிமை கோரியது. மேலும் மும்பை ஐகோர்ட்டில் முறையிட்டு காஞ்சூர்மார்க்கில் பணிமனை அமைக்க இடைக்கால தடையை வாங்கியது.
மோதலை கைவிட வேண்டும்
இதன் காரணமாக மெட்ரோ ரெயில் பணிமனை அமைப்பதில் மேலும் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. இதேபோல மாநில மந்திரி ஏக்நாத் ஷிண்டே மெட்ரோ ரெயில் திட்டப்பணிகளை நிறைவேற்ற மத்திய அரசு, மாநில அரசுக்கு ஒத்துழைக்கவில்லை என குற்றம்சாட்டி உள்ளார். மேலும் முதல் - மந்திரி உத்தவ் தாக்கரே நீங்கள் (மத்திய அரசு) காஞ்சூர்மார்க்கில் பிரச்சினை செய்தால், நாங்கள் புல்லட் ரெயில் திட்டத்துக்காக வழங்கப்பட்ட பி.கே.சி. இடத்தில் பிரச்சினை செய்வோம் என கூறியுள்ளார்.
மாநில அரசு இடப்பிரச்சினை குறித்து பேச்சு வார்த்தைக்கு தயார் என கூறியுள்ள போதும், மத்திய அரசிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை. எனவே மாநில அரசு மெட்ரோ பணிமனை அமைக்க மாற்று இடத்தையும் தேடத்தொடங்கி உள்ளது.
ஏற்கனவே மாநில அரசு, பா.ஜனதா மோதலால் மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு பல கோடி ரூபாய் மக்களின் வரிப்பணம் வீணாகி உள்ளது. இந்தநிலையில் மும்பை மெட்ரோ ரெயில் 3-வது திட்டம் குறிப்பிட்ட காலத்திற்குள் முடியுமா என்ற சந்தேகமும் மக்கள் இடையே எழுந்து உள்ளது.
எனவே மத்திய, மாநில அரசுகள் மோதல் போக்கை கைவிட்டு பிரச்சினைகளுக்கு பேச்சு வார்த்தைகள் மூலம் தீர்வு கண்டு, மெட்ரோ ரெயில் திட்டப்பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என்பதே மும்பை மக்களின் கோரிக்கையாக உள்ளது.