கர்நாடகத்தில் புத்தாண்டு கொண்டாட அனுமதி இல்லை; தடையை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை; போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை எச்சரிக்கை
கர்நாடகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதாகவும், இந்த தடையை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா பாதிப்பு
தற்போது கடும் குளிர் நிலவி வரும் சூழ்நிலையில் மாநிலத்தில் கொரோனா 2-வது அலை வரக் கூடும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையே இங்கிலாந்தில் உருமாறிய புதிய கொரோனா வைரஸ் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. இதனால் கர்நாடகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
வழிகாட்டுதல் வெளியிடப்படும்
கர்நாடகத்தில் புத்தாண்டு கொண்டாட அனுமதி இல்லை. இது தொடர்பாக பெங்களூரு மாநகராட்சி கமிஷனர் மற்றும் நகர போலீஸ் கமிஷனர் வழிகாட்டுதலை வெளியிடுவார்கள். பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் ஒரே இடத்தில் சேர்ந்தால் கொரோனா பரவக்கூடிய வாய்ப்பு உள்ளது. அதிலும் விருந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்கள் மிக நெருக்கமாக இருக்கிறார்கள். கொரோனா பரவலை தடுக்கும் நோக்கத்தில் விரைவில் வழிகாட்டுதல் வெளியிடப்படும். இதை தவிர்க்க முடியாது.
இந்த வழிகாட்டுதல் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து பெங்களூரு மாநகராட்சி கமிஷனர் மற்றும் நகர போலீஸ் கமிஷனருடன் ஆலோசனை நடத்தி இருக்கிறோம். கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டியது அவசியம். இரவு நேர ஊரடங்கு அமலில் இல்லை என்பதால், விருந்து நிகழ்ச்சிகள், கொண்டாட்டங்களுக்கு தடை இல்லை என்று அர்த்தம் இல்லை. சட்டத்திற்கு விரோதமாக யாராவது நடந்து கொண்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தலைமறைவாக இருக்க முடியாது
இங்கிலாந்தில் இருந்து கர்நாடகம் திரும்பியவர்களை கண்டுபிடிக்கும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பது குறித்த விவரங்களை சேகரித்து வருகிறோம். யாரும் தலைமறைவாக இருக்க முடியாது.
இங்கிலாந்தில் இருந்து வந்தவர்கள் தாங்களாகவே வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். விமான நிலையங்களில் தீவிரமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இங்கிலாந்தில் இருந்து வருபவர்கள் குறித்து சுகாதாரத்துறை வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. அதை அனைவரும் பின்பற்ற வேண்டும்.
அதிகாரிகள் மோதல்
பாதுகாப்பான நகர திட்டத்தில் 2 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடையே எழுந்துள்ள மோதல் பிரச்சினை குறித்து, நான் தலைமை செயலாளர் மற்றும் போலீஸ் டி.ஜி.பி.யிடம் இருந்து விவரங்களை கேட்டு பெற்றுள்ளேன். இந்த விஷயத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தலைமை செயலாளர் மற்றும் டி.ஜி.பி. முடிவு எடுப்பார்கள். பெங்களூரு மாநகராட்சி எல்லைக்குள் உள்ள ரெசார்ட் விடுதிகள், விடுதிகள், உணவகங்கள், கிளப்புகளில் அரசின் விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.