மினி கிளினிக்: தி.மு.க.வின் கிராமசபை கூட்டங்களால் மக்களுக்கு என்ன நன்மை ஏற்படும்? அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கேள்வி

தி.மு.க.வின் கிராம சபை கூட்டங்களால் மக்களுக்கு என்ன நன்மை ஏற்படும்? என்று நரசிம்மநாயக்கன்பாளையம், ராமம்பாளையத்தில் அம்மா மினி கிளினிக்கை தொடங்கி வைத்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்..

Update: 2020-12-27 13:45 GMT
இடிகரை,

கோவை மாவட்டம் நரசிம்மநாயக்கன்பாளையத்தில் அம்மா மினி கிளினிக் அமைக்கப்பட்டு நேற்று தொடக்க விழா நடந்தது. விழாவுக்கு வந்தவர்களை நகர செயலாளர் ஆனந்தன் வரவேற்றார். மாவட்ட கலெக்டர் ராஜாமணி, கோவை வடக்கு புறநகர் மாவட்ட செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் எம்.எல்.ஏ, வி.சி.ஆறுக்குட்டி எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். மினி கிளினிக்கை தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார். பின்னர் அவர், 10 கர்ப்பிணிகளுக்கு ரூ.2 ஆயிரம் மதிப்பீட்டில் தாய், சேய் நலப்பெட்டகம் வழங்கி பேசினார். முன்னதாக கோவை மாவட்ட மலர் வியாபாரிகள் சங்கம் சார்பில், புதிதாக கட்டப்பட்டுள்ள மலர் சந்தையில் தற்காலிகமாக பூ வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று மனு அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் துவாரகநாத் சிங், துணை இயக்குனர் மருத்துவ பணிகள் ரமேஷ் குமார், கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், ஒன்றிய செயலாளர்கள் கோவனூர் துரைசாமி, கே.வி.என்.ஜெயராமன், முன்னாள் சேர்மன் வீரபாண்டி விஜயன், மாவட்ட கவுன்சிலர் கவிசரவணகுமார், ஒன்றிய துணைத்தலைவர் பூக்கடை ரவி, ஊராட்சி தலைவர்கள் ரவி, ரமேஷ், சவுந்திரவடிவு ஆனந்தன், ஒன்றிய கவுன்சிலர்கள் மாணிக்கம், மினி சம்பத், நரசிம்மநாயக்கன்பாளையம் அ.தி.மு.க. நிர்வாகிகள் பி.ஏ.வேலுசாமி, லட்சுமணசாமி, முத்துசாமி, சம்பத்குமார், சிவகுமார், சி.எம்.நாகராஜ், கதிரேசன், சுந்தர்ராஜ், தாமோதரன், சண்முகம், சரவணன், ராஜன், கனகராஜ், ஆறுக்குட்டி, சகாதேவன், சிவானந்தம், பூச்சியூர் வேலுசாமி, பூச்சியூர் துரைசாமி, ராமசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேட்டுப்பாளையத்தை அடுத்த ஜடையம்பாளையம் ஊராட்சி ராமம்பாளையத்தில் முதல்- அமைச்சரின் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. ஓ.கே.சின்னராஜ் எம்.எல்.ஏ. வரவேற்றார். மினி கிளினிக்கை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்கி திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

அம்மா மினி கிளினிக் காலை 8 மணி முதல் 12 மணி வரையும்,மாலை 4 மணி முதல் 7 மணி வரை செயல்படும். இங்கு தொற்றும் மற்றும் தொற்றா நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும். கொரோனா காலத்தில் தனது உடல்நிலை குறித்து சிறிதும் பொருட்படுத்தாமல் முதல்- அமைச்சர் மாவட்டங்கள் தோறும் சென்று ஆய்வு பணியை மேற் கொண்டார். இதன் மூலம் அவர், ஏழை எளிய கிராமமக்களின் நலனை கருத்தில் கொண்டு அம்மா மினி கிளினிக் திட்டத்தை உருவாக்கினார்.

கோவை மாவட்டத்தில் 50 ஆண்டுகளில் நிறைவேற்றப்படாத திட்டங் கள் 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்டு உள்ளது. கோவை மாவட்டத் திற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து சாலைகள், பாலங்கள், குளிர்பதன கிடங்கு, புறவழிச்சாலை, காரமடை மேம்பாலம் என எத்தனையோ திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஊராட்சி அமைப்புகளில் இருந்து வந்ததால் மக்களுடைய பிரச்சினைகள் எங்களுக்கு நன்கு தெரியும். கோவை மாவட்டத்துக்கு 5 கல்லூரிகளை கொண்டு வந்துள்ளோம்.

நாம் கேட்டதை கொடுக்கும் இடத்தில் தமிழக முதல் -அமைச்சர் உள்ளார். கிராம சபை கூட்டங்களை அரசு தான் நடத்த வேண்டும். அதில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல முடியும். ஆனால் தி.மு.க.வினர் நடத்தும் கிராம சபை கூட்டங்களால் மக்களுக்கு என்ன நன்மை ஏற்பட்டு விடப் போகிறது.

நம்முடைய மாவட்டத்தில் கட்சி, சாதி பாகுபாடு இன்றி திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். தி.மு.க.வினர் தவறான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றக்கூடாது. கோவை அரசு மருத்துவமனைக்கு ரூ.25 கோடியில் கேன்சர் மெஷின் மற்றும் ரூ.6.5 கோடியில் ஒரு மெஷின் வழங்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

இதில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கர்ப்பிணி பெண்கள் 5 பேருக்கு ஊட்டச்சத்து மருந்து பெட்டகம் மற்றும் விபத்தில் காயமடைந்த ஒருவருக்கு மருத்துவ சிகிச்சைக்காக ரூ.25 ஆயிரம் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. ஏ.கே.செல்வராஜ், மாவட்ட செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் எம்.எல்.ஏ., மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் நாசர், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் அமுல் கந்தசாமி, காரமடை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மணிமேகலை, மாவட்ட துணை செயலாளர் பி.டி.கந்தசாமி, ஒன்றிய செயலாளர்கள் எம்.எஸ்.ராஜ்குமார், ஜீவானந்தம், சிறுமுகை நகர செயலாளர் ரவிக்குமார், ஊராட்சி தலைவர்கள் ஞானசேகரன், பூபதி என்ற குமரேசன், விமலா மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஜடையம்பாளையம் ஊராட்சி தலைவர் ஆர்.கே.பழனிசாமி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்