ஆசைவார்த்தை கூறி சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்த வாலிபர் கைது

ஆசை வார்த்தை கூறி சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-12-27 06:07 GMT
வீரபாண்டி,

தஞ்சாவூர் மாவட்டம் வள்ளலார் நகர் முருகன் காலனியை சேர்ந்த செந்தில்குமார் என்பவரின் மகன் உத்திராபதி (வயது 20). இவர் திருப்பூர் வீரபாண்டி பகுதியில் உள்ள ஒரு டையிங் நிறுவனத்தில் கடந்த 4 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு அருகில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த 17 வயது சிறுமியுடன் காதல் ஏற்பட்டுள்ளது.

மேலும் அந்த சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி கடந்த 3 மாதங்களுக்கு முன் வீட்டிற்கு தெரியாமல் சிறுமியை அழைத்துச் சென்று திருமணம் செய்துள்ளார்.

போக்சோவில் கைது

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். அதன் பேரில் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் இருவரையும் தேடி வந்தனர். நேற்று முன்தினம் தஞ்சாவூரில் அவர்கள் இருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் அவர்கள் இருவரையும் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சிறுமியை ஏமாற்றி உத்திராபதி திருமணம் செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து உத்திராபதிவை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அந்த சிறுமியை கோவையில் உள்ள பெண்கள் காப்பகத்துக்கு போலீசார் அனுப்பிவைத்தனர்.

மேலும் செய்திகள்