காட்பாடி பிரம்மபுரத்தில் ஏரிக்கரையை உடைத்து நீர் வெளியேற்றம்; கண்டுகொள்ளாத அதிகாரிகள்

காட்பாடி பிரம்மபுரத்தில் ஏரிக்கரையை உடைத்து நீர் வெளியேற்றப்படுகிறது. இதனை அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் கிராம மக்கள் பதற்றம் அடைந்துள்ளனர்.

Update: 2020-12-27 01:06 GMT
ஒற்றைக்கண் பாலத்தின் கீழே ஏரி நீர் குளம் போல் தேங்கி நிற்பதை படத்தில் காணலாம்
ஏரிக்கரை உடைப்பு
காட்பாடி தாலுகாவில் உள்ள பெரிய ஏரிகளில் பிரம்மபுரம் ஏரியும் ஒன்றாகும். இந்த ஏரி நிரம்பினால் பிரம்மபுரம், கோரந்தாங்கல், சேவூர் ஆகிய கிராமங்களில் உள்ள கிணறுகளில் நீர்மட்டம் உயரும். பிரம்மபுரம் ஏரிக்கரையை சில சமூக விரோதிகள் உடைத்து கால்வாய் போல் வெட்டி நீரை வெளியேற்றி உள்ளனர். இந்த நீர் ஒற்றைக் கண் பாலத்தில் குளம்போல் தேங்கி உள்ளது. இதனால் இந்த பாலத்தின் வழியாக சஞ்சீவிராயபுரம், கோரந் தாங்கல் கிராமங்களுக்கு நடந்தும், இரு சக்கர வாகனங்கள் செல்லும் மக்கள் செல்ல முடியாமலும் அவதிப்படுகின்றனர். தண்ணீர் குளம் போல் தேங்கி இருப்பதால் மக்கள் மாற்று பாதையாக ரெயில்வே கேட் வழியாக செல்கின்றனர்.

காட்பாடி வழியாக ரெயில்கள் செல்லும் போது இந்த கேட் மூடப்படுகிறது. அதனால் 2 பக்கமும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. மீண்டும் கேட் திறக்கப்படும் போது தான் அவர்கள் அந்த வழியாக செல்ல முடியும். இதனால் பலர் ஒற்றைக்கண் பாலத்தின் வழியாக செல்வது வழக்கம். ஆனால் அந்த பாலத்தில் தண்ணீர் குளம் போல் தேங்கி இருப்பதால் நடந்தும், இருசக்கர வாகனத்திலும் மக்களால் செல்ல முடியவில்லை.

பிரம்மபுரம் ஏரிக்கரை உடைத்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு இருப்பதை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என பிரம்மபுரம் கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

குடிமராமத்து திட்டத்தில்...
இது குறித்து அவர்கள் கூறுகையில் தமிழக அரசு தற்போது ஏரி, குளங்களை குடிமராமத்து திட்டத்தில் பல கோடியை செலவு செய்து வருகிறது. ஆனால் பிரம்மபுரம் ஏரியை அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளவில்லை. பிரம்மபுரம் ஏரியை குடிமராமத்து திட்டத்தில் சேர்த்து சீரமைக்கவேண்டும்.

ஏரியை தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும்.மேலும் கரைகளை பலப்படுத்தி கரைகள் இரு பக்கங்களிலும் மரக்கன்றுகளை நட வேண்டும்.அவ்வாறு செய்தால் கரை உடைவதற்கு வாய்ப்பில்லை. கரையை உடைத்து கால்வாய் வெட்டி தண்ணீரை வெளியேற்றுவதற்கு வாய்ப்பு இல்லை. இதனை வேலூர் மாவட்ட கலெக்டர் நேரடியாக வந்து பார்வையிட்டு ஏரியை குடிமராமத்து திட்டத்தில் சேர்த்து தூர் வார வேண்டும்.

இவ்வாறு செய்தால் இந்த ஏரி தண்ணீர் நிரம்பி பிரம்மபுரம், கோரந் நாங்கல், சேவூர் ஆகிய கிராமங்களில் உள்ள கிணறுகளில் நீர் மட்டம் உயரும். விவசாயிகளுக்கும் விவசாயம் செய்ய தண்ணீர் கிடைக்கும் என்றனர்.

மேலும் செய்திகள்