கரூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு இல்லை 31 பேருக்கு தொடர் சிகிச்சை

கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் 31 பேருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2020-12-27 00:57 GMT
கரூர்,

தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. கரூர் மாவட்டத்தில் கொரோனாவின் பாதிப்பு கடந்த சில நாட்களாக இறங்குமுகமாக இருந்து வருகிறது. அதே சமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது.

இந்தநிலையில் நேற்று மாலை வெளியிடப்பட்ட தமிழக சுகாதாரத்துறை பட்டியலின்படி கரூர் மாவட்டத்தில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என்று அறிவிப்பு வந்துள்ளது. இதனால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

31 பேருக்கு தொடர் சிகிச்சை

கரூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு இல்லையென்றாலும், பொதுமக்கள் வெளி இடங்களுக்கு செல்லும்போது முககவசம் அணியவேண்டும், கூட்டமாக பொது இடங்களில் கூடக்கூடாது. சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். கரூர் காந்திகிராமத்தில் உள்ள அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு 18 ஆண்கள், 13 பெண்கள் என மொத்தம் 31 பேர் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்