கட்சியினரை வைத்தே கிராம சபை கூட்டம்: வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தோல்வி அடைவது உறுதி; அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
தி.மு.க.வினரை வைத்தே கிராம சபை கூட்டம் நடத்துவதால் வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தோல்வி அடைவது உறுதி என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
முதல்-அமைச்சர் வேட்பாளர்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவித்த பின்னர்தான் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பங்கேற்ற நிகழ்ச்சியில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பா.ஜனதாவுடன் கூட்டணி தொடரும் என்று அறிவித்தனர். இதனை அமித்ஷாவும் ஏற்று கொண்டார்.
தமிழகத்தில் முதல்-அமைச்சர் வேட்பாளர் குறித்து மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் பதில் அளிக்காமல் மவுனமாக சென்றது குறித்து கேட்கிறீர்கள், மவுனம் சம்மதம் என்று பொருள்.
பா.ஜனதாவை பொறுத்தவரை அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரது கருத்துகளை மட்டுமே ஏற்று கொள்ள முடியும். தமிழகத்தில் உள்ள பா.ஜனதா தலைவர்களின் கருத்துகளை ஏற்க முடியாது. தேர்தல் நேரத்தில் கட்சியினர் பல கருத்துகளை கூறினாலும், தலைமையின் முடிவே இறுதியானது.
தி.மு.க. தோல்வி உறுதி
தி.மு.க. போன்று அனைத்து கட்சிகளும் கிராமசபை கூட்டம் நடத்தினால் கிராமங்களில் ஒற்றுமை பாதிக்கப்படும். கிராமசபை கூட்டம் என்ற பெயரில் அ.தி.மு.க.வை புறக்கணிக்கிறோம் என்று தி.மு.க.வினர் தீர்மானம் நிறைவேற்றுவது போன்று, தி.மு.க.வினரை விரட்டியடிப்போம் என்று அ.தி.மு.க.வினர் தீர்மானம் நிறைவேற்ற வெகுநேரம் ஆகாது. ஆனால், தமிழகம் அமைதி பூங்காவாக இருக்க வேண்டும். சட்டம்-ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் கவனமாக உள்ளோம்.
பதவிக்கு வருவதற்கு ஆசைப்படலாம். ஆனால், பதவி வெறியாக மாறக்கூடாது. பஞ்சாயத்து தலைவரின் தலைமையில் நடைபெறுவதுதான் கிராமசபை கூட்டம். ஆனால், கிராமசபை கூட்டம் என்ற பெயரில் தி.மு.க.வினரை வைத்தே கூட்டம் நடத்துகின்றனர். இதுபோன்ற செயல்களால் வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தோல்வி அடைவது உறுதி.
தே.மு.தி.க. அங்கம் வகிக்கும் அணிதான் வெற்றி பெறும் என்று அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியது, அக்கட்சியினருக்கு புத்துணர்ச்சி அளிப்பதற்காக கூறி இருக்கலாம். தேர்தல் நேரத்தில் அனைத்து கட்சிகளும் இயற்கையாக சொல்லக்கூடிய ஒன்றுதான்.
இவ்வாறு அவர் கூறினார்.