தேனி மாவட்டத்தில் வைகுண்ட ஏகாதசியையொட்டி பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு

தேனி மாவட்டத்தில் வைகுண்ட ஏகாதசியையொட்டி பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.

Update: 2020-12-26 01:38 GMT
நரசிங்கபெருமாள் கோவில்களில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த காட்சி.
போடி
போடியில் பிரசித்தி பெற்ற சீனிவாச பெருமாள் கோவிலில் நேற்று வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி அதிகாலை 5 மணிக்கு நடந்தது.

கோவிலுக்கு அதிகாலையிலேயே பக்தர்கள் வந்தனர். அவர்கள் சொர்க்கவாசல் வழியாக சென்று ஸ்ரீதேவி, பூதேவியுடன் கூடிய சீனிவாச பெருமாளை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு தீர்த்தம் மற்றும் துளசி வழங்கப்பட்டது. பின்பு பக்தர்கள் கோவில் பிரதான மூலஸ்தானத்தில் முத்தங்கி அலங்காரத்தில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவியுடன் கூடிய சீனிவாச பெருமாளை வழிபட்டனர். பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் சுரேஷ், பட்டாச்சாரியார்கள் கார்த்திக் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

பெரியகுளம்
இதேபோல் பெரியகுளம் தென்கரையில் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதனை முன்னிட்டு வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. மேலும் உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

பெரியகுளம் வடகரை ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் உற்சவர் அலங்கரிக்கப்பட்டு பெரியகுளம் நகர் பகுதியில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஆண்டிப்பட்டி
ஆண்டிப்பட்டி அருகே உள்ள ஜம்புலிப்புத்தூரில் பழமை வாய்ந்த கதலி நரசிங்கப்பெருமாள் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. அதிகாலை 4.30 மணிக்கு கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதைத்தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் சொர்க்கவாசல் வழியாக பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் தங்கலதா, ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ., மகாராஜன், ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் லோகிராஜன், துணைத்தலைவர் வரதராஜன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

உத்தமபாளையத்தில் யோக நரசிங்க பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியைெயாட்டி ஸ்ரீதேவி, பூதேவி, ரெங்கநாதர் சாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து மேளதாளம் முழங்க சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோவில் விழா ஏற்பாடுகளை ஓம் நமோ நாராயண பக்க சபையினர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்